இதய மாற்று ஆபரேஷன் வலியை மறக்க ரஜினி படங்களை பார்த்த சிறுவன்
பெங்களூரு: பெங்களூரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் வலியை மறக்க ரஜினி படம் பார்த்துள்ளான்.
தென்மேற்கு பெங்களூரில் உள்ள மூடலபாளையாவை சேர்ந்தவர் அமுதா ஹரி. ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரின் 13 வயது மகன் குஷாலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்மூடலபாளையாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு குஷாலை அழைத்துச் சென்றும் பலனில்லை.

போர்டிஸ்
அமுதா பெங்களூரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு குஷாலை அழைத்துச் சென்றார். அங்கு குஷாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் இதயத்தில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தனர். குஷாலின் பிரச்சனையை மாத்திரைகள் மூலம் தீர்க்க முடியாது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை
குஷாலின் மருத்துவ செலவை 2 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஏற்றன. இதையடுத்து கடந்த மாதம் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து 20 வயது நபரின் இதயம் விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு குஷாலுக்கு பொருத்தப்பட்டது. அந்த இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்து குஷாலுக்கு பொருத்த 4 மணிநேரம் ஒரு நிமிடம் ஆனது என்று போர்டிஸ் மருத்துவர் விவேக் ஜவாலி தெரிவித்துள்ளார்.

ரஜினி
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்பட்ட வலியை மறக்க குஷால் ரஜினிகாந்த் படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக விவேக் கூறியுள்ளார். குஷால் நலமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் மருத்துவமனையில் இருந்தவரை ரஜினி படங்களை பார்த்து வந்துள்ளார். ரஜினி படங்களை பார்த்தே குஷாலின் உடல்நலம் தேறியதாக மற்றொரு மருத்துவரான முரளி சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

பேட்டி
குஷாலின் அம்மா அமுதா கூறியதாவது, முதலில் என் மகனுக்கு வாந்தி மட்டுமே இருந்தது. உள்ளூரில் உள்ள மருத்துவமனைகளால் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தற்போது நலமாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











