Rajini: ரஜினி காலில் விழுந்த கமல் ரசிகர்... காரணம் கேட்டு அதிர்ந்துபோன தேவா... ரியல் பாட்ஷா ஸ்டோரி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு இன்னொரு பாட்ஷா போல இருக்குமா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்ஷா படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதுகுறித்து இசையமைப்பாளர் தேவா மனம் திறந்து பேசியுள்ளது ரஜினி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ரஜினி காலில் விழுந்த கமல் ரசிகர்:நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைப் காணப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் இதற்கு காரணம். நெல்சன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக நாளை (ஜூலை 28) ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்துகொள்ளவிருப்பதால் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் ரியல் சம்பவங்கள் இசை வெளியீட்டு விழா மேடையில் இருந்தே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் பாட்ஷா படத்தின் ஷூட்டிங் நேரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து இசையமைப்பாளர் தேவா மனம் திறந்துள்ளது ரஜினி ரசிகர்களுக்கு இன்னும் வைப் கொடுத்துள்ளது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ரகுவரன், நக்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த பாட்ஷா, கோலிவுட்டின் மெகா ப்ளாக் பஸ்டர் படங்களில் முக்கியமானது. தனது கேரியரில் இப்படியொரு படம் இனி வரவே வாய்ப்பில்லை என சூப்பர் ஸ்டாரே பல இடங்களில் மனம் திறந்து பேசியுள்ளார். இப்படத்தின் தீம் மியூசிக் எப்போது கேட்டாலும் சிலிர்ப்பைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
பாட்ஷா படத்திற்கு இசையமைக்கும் போது தான் அந்த ரியலான சம்பவத்தை கேள்விப்பட்டுள்ளார் தேவா. அதாவது பாட்ஷா படத்தின் பாடல் சம்பந்தமாக தேவாவின் ஸ்டுடியோ சென்றுள்ளார் ரஜினிகாந்த். அதன்பின்னர் ரஜினி வீடு திரும்பும் போது, தேவாவின் ஸ்டுடியோ வெளியே ஒரு ஆட்டோ டிரைவர் நீண்டநேரம் காத்திருந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்துள்ளார். பின்னர் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார்.
இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த தேவா, ரஜினியை தனியாகக் கூட்டிச் சென்று "யார் இந்த ஆட்டோ டிரைவர்... உங்கள் ரசிகரா..? எனக் கேட்டுள்ளார். அதற்கு ரஜினியோ, "இல்லை அவர் கமல்ஹாசன் ரசிகர்" என பதில் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தேவா, "அப்புறம் ஏன் உங்கள் காலில் விழுந்து மாலை அணிவித்துவிட்டு செல்கிறார்" என அடுத்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

அதற்கும் ரஜினி பதில் கூறியுள்ளார், "ஆமாம், அவர் கமல் ரசிகர் தான். நான் சினிமாவில் வாய்ப்புத் தேடும் போது அந்த ஆட்டோ டிரவைர் என் பக்கத்து அறையில் தங்கியிருந்தார். ஆனால், எனக்கு முன்பே கமல் பெரிய ஹீரோ என்பதால் அந்த ஆட்டோ டிரைவர் கமலின் ரசிகராக இருந்தார். அப்போது அவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து பிழைப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்."
"பின்னர் நான் முள்ளும் மலரும் படத்தில் நடித்தபோது அதில் கிடைத்த சம்பளத்தில், அவருக்கு சொந்தமாக புதிய ஆட்டோ ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதற்காக ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளில் தன்னை வந்து சந்தித்து செல்வது வழக்கம்" எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன தேவா, பாட்ஷா படத்தில் வருவது போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தராம். இந்த நினைவுகளை தேவா சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











