Rajini: சைலண்டாக தொடங்கிய ஜெயிலர் 2... ரஜினியுடன் இணையும் மெகா கூட்டணி... பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தரமான கம்பேக் கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் சைலண்டாக தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைலண்டாக தொடங்கிய ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரஜினியை இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லிங்குசாமி இருவரும் தனித்தனியே சந்தித்திருந்தனர். மேலும் ரஜினியுடன் மாரி செல்வராஜ் இணையவுள்ளதாகவும், இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. இதனால் தலைவர் 172 படத்தை மாரி செல்வராஜ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தலைவர் 173 படத்தில் தான் ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணி இணைகிறதாம். அதற்கு முன்பு ரஜினியின் தலைவர் 172 படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். ஏற்கனவே சொன்னபடி ரஜினி - நெல்சன் கூட்டணி மீண்டும் இணையும் இந்தப் படம் ஜெயிலர் 2ம் பாகம் தான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் 2ம் பாகத்திலும் சிவராஜ்குமார், மோகன்லாலை நடிக்க வைக்க நெல்சன் முடிவு செய்துள்ளாராம். அதனை மனதில் வைத்தே ஜெயிலர் 2ம் பாகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வருகிறாராம். அதன்படி ஜெயிலர் 2ம் பாகத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை நெல்சனும் அவரது குழுவும் தொடங்கிவிட்டதாம். இதற்கான வேலைகள் மைசூரில் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் 171, ஜெயிலர் 2, தலைவர் 173 என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். 2025ம் ஆண்டுக்குள் இந்த மூன்று படங்களையும் முடித்துவிட பிளான் செய்யப்பட்டுள்ளதாம். அதன்பின்னரும் மேலும் 2 படங்களில் நடிக்கவுள்ளாராம் ரஜினி. இந்தப் படங்களின் இயக்குநர்கள் யார் என்பதையும் ரஜினி முடிவு செய்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











