Rajini: ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது... விஜய் அப்படி நடந்திருக்கக் கூடாது!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று தொடங்கியது.
முன்னதாக கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஜினி, விஜய் இடையே நடக்கும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அதிரடியாக பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் டைட்டிலில் விஜய்க்கு உரிமை இல்லை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் முன்னணியில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியிருந்தார் ரஜினி. அதில் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்காக தான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது என்றும், அதனை எப்போதோ வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் பேசியிருந்தார். மேலும், 'காகம் - பருந்து' என கதை சொல்லி இளம் ஹீரோக்களுக்கும் பஞ்ச் வைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் டைட்டில், காகம் - பருந்து குட்டி ஸ்டோரி இரண்டுமே நடிகர் விஜய்க்காக தான் என சொல்லப்பட்டது.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இனிமேல் வசூல் ரீதியாக மாஸ் காட்டுபவர் தான் சூப்பர் ஸ்டார் எனவும் அவர்கள் கூறி வந்தனர். அதேநேரம் என்றுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என திருப்பூர் சுப்ரமணியம், நடிகர் பிரபு உள்ளிட்டோர் பேசி வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜனும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அதிரடியாக பேசியுள்ளார்.

அதாவது, சூப்பர் ஸ்டார் டைட்டில் மக்களால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டது எனவும், அதனை விஜய் தட்டிப் பறிக்க முயல்வதாகவும் கூறியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியிருந்தார். அப்போது அதனை கேட்டுக் கொண்டிருந்த விஜய், அமைதியாக இருந்திருக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு ரஜினி தான் சரியானவர் எனக் கூறியிருந்தால், விஜய்யை ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள் என்றுள்ளார்.
மேலும், இன்று விஜய் படம் நன்றாக ஓடினால், நாளை இன்னொரு ஹீரோவின் படம் அதிகமாக வசூலிக்கலாம். அதற்காக விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்லிவிட முடியுமா.? விஜய்யின் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் பணத்தை இழந்துள்ளார்கள், இப்போது வரை அவங்களால மீண்டும் படம் எடுக்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது சூப்பர் ஸ்டார் டைட்டில் இப்போது அவசியமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். ஜெயிலர் ரிலீஸாகவிருக்கும் நிலையில், திடீரென ரஜினிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











