Rajini: ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணியில் விஜய்யின் சீக்ரெட் அசைன்மெண்ட்... பரபரக்கும் கோலிவுட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்த புகைப்படம் நேற்று வைரலானது. இதனால் ரஜினியின் தலைவர் 172 அல்லது தலைவர் 173 படத்தை மாரி செல்வராஜ் இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணியில் தளபதி விஜய் சீக்ரெட்டாக என்ட்ரி கொடுக்கவிருப்பது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.
ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணியில் விஜய்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக ரஜினியின் படத்தை இயக்கவுள்ளாராம். மாரி செல்வராஜ் சொன்ன ஒன் லைன் கதையை கேட்டு மகிழ்ச்சியான ரஜினி, இந்தப் படத்தை உடனே செய்யலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம்.
இதனால், தலைவர் 171 முடிந்ததும் உடனடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணி படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ உரிமையாளர் லலித் குமார் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் விஜய்யும் பணம் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு எதிராக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேச்சுகள் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் தயாரிப்பு நிறுவனம் ரஜினியை வைத்து படம் தயாரிக்கவுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, மாரி செல்வராஜ், விஜய் என எதிர்பாராத கூட்டணியில் தலைவர் 172 உருவாகிறதா எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
அதேபோல், இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழை படத்தை முடித்துவிட்ட மாரி செல்வராஜ், விரைவில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கவுள்ளார். அதன் நடுவே தலைவர் 172 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளையும் முடித்துவிட பிளான் செய்துள்ளாராம். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியுடன் நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ ஆகியோரும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











