Rajini: "சங்கி கெட்ட வார்த்தை கிடையாது.. ஐஸ்வர்யா அப்படி சொல்லல..” மகளுக்காக விளக்கம் கொடுத்த ரஜினி!
சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி கிடையாது என ரஜினிக்காக அவரது மகள் ஐஸ்வர்யா பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு வைரலான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தற்போது அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.
சங்கி கெட்ட வார்த்தை கிடையாது
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மூன்று தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைகா சுபாஸ்கரன், ஏஆர் ரஹ்மான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கி கிடையாது என மேடையிலேயே ஆவேசமானார்.

அதாவது, எனது அப்பா ரஜினியை சமூக வலைத்தளங்களில் சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் போன்ற ஒரு படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த மாதிரியான படங்களில் நடிக்க முடியாது. லால் சலாம் படத்தில் ரஜினியை தவிர அவ்வளவு தைரியமாக யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அதனால் சொல்கிறேன் ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலானது. இதனையடுத்து சங்கி என்றால் அது கெட்ட வார்த்தையா என விவாதத்தை கிளப்பினர் நெட்டிசன்கள். இதுதொடர்பாக மீண்டும் ட்ரோல்கள் அதிகமாகின. ரஜினிகாந்த் சங்கி இல்லை என இவ்வளவு பதற்றமாக சொல்வதை பார்த்தால் அது தவறான வார்த்தையாக இருக்குமோ என கமெண்ட்ஸ் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், லால் சலாம் மேடையில் ஐஸ்வர்யா அப்படி பேசியபோது அதனை கேட்டுக் கொண்டிருந்த ரஜினி கண் கலங்கினார். இதனால் அவரும் மேடையில் இதுகுறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ரஜினி எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. மாறாக அவர் விஜய் பற்றியும் அவருக்கும் எனக்கும் எந்த போட்டியும் இல்லை என்பதையும் மட்டுமே விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்புக்காக ஆந்திரா கிளம்பிச் சென்றார் ரஜினி.
இதற்காக சென்னை விமான நிலையம் சென்ற ரஜினியிடம் சங்கி என்ற வார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, "சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. ஐஸ்வர்யா அப்படி நினைத்து சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்பக் கூடியவர் என்று தான் அவர் கூறியிருந்தார்" என விளக்கம் கொடுத்தார்.
மேலும், லால் சலாம், வேட்டையன் படங்கள் குறித்தும் பேசிவிட்டு கிளம்பிவிட்டார். இதன்மூலம் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இப்போதும் சங்கி என்ற வார்த்தைக்கு பூசி மொழுகிய படியே ரஜினி விளக்கம் கொடுத்துள்ளதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











