உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நேரடிப் படமான லிங்கா நாளை உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.
படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் துவங்குகிறது.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் லிங்கா.

5000 அரங்குகள்
உலகெங்கும் 5000 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். வேறு எந்த இந்தியப் படமும் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை. குறிப்பாக வளைகுடா நாடுகளில் 80 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
அமெரிக்காவில் மட்டும் 328 அரங்குகளிலும், ஆந்திராவில் 1400 அரங்குகளிலும், கேரளாவில் 250 அரங்குகளிலும், கர்நாடகத்தில் 180 அரங்குகளிலும் லிங்கா வெளியாகிறது.

மும்பையில்
மும்பை மற்றும் புறநகர்களில் மட்டும் 200 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. இந்த வெளியீட்டை மும்பையில் உள்ள ரஜினி ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

திருவிழா கோலம்
தமிழகத்தில் லிங்கா வெளியாகும் அத்தனை அரங்குகளும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கொடிகள், தோரணங்கள், பிரமாண்ட ரஜினி கட்அவுட்டுகள், பேனர்கள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகள்
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இதே போன்ற ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். அமெரிக்காவில் லிங்கா லிங்கா வெளியாகும் அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்குவது, விசிலடித்து ஆரவாரம் செய்ய இலவச விசில்கள் வழங்குவது என ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இதுவரை கண்டதில்லை
இதுவரை எந்த ரஜினி படமும் இப்படி வெளியானதில்லை எனும் அளவுக்கு லிங்கா வெளியீடு அமைந்துள்ளது. ரசிகர்கள் எப்போதுமில்லாத பெரும் உற்சாகத்துடன் இந்த வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











