“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா?
ரஜினியின் புதிய படத்திற்கு நாற்காலி எனப் பேர் வைக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திற்கு நாற்காலி எனப் பெயர் வைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரிலீசுக்கு முன்னரே இப்படம் கதைத் திருட்டுப் பிரச்சினையில் சிக்கியது. பின்னர், இப்படத்தில் இடம் பெற்றிருந்த பல காட்சிகள் ஆளும் அரசை விமர்சிப்பதாக இருந்ததால், ரிலீசுக்குப் பின்னரும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

ரஜினி - முருகதாஸ் கூட்டணி:
இப்படத்தைத் தொடர்ந்து ரஜினியை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படமும் அரசியல் சார்ந்த படமாகத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு:
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, ரஜினி - சந்தோஷ் சிவன் இணைந்து ‘தளபதி' படத்தில் பணிபுரிந்துள்ளனர். எனவே, பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன். இன்னும் படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நாற்காலி தான் தலைப்பா?
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நாற்காலி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகியுள்ளது. படத்தில் ரஜினி முதல்வராக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இன்னும் இது தொடர்பாக படக்குழுவினர் ஏதும் மறுப்பு தெரிவிக்காததால், இந்தத் தலைப்பே படத்திற்கு வைக்கப்பட்ட உண்மையான தலைப்பாக இருக்குமோ என ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

எகிறும் எதிர்பார்ப்பு:
ரஜினியும் அரசியலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இப்படம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு சர்கார் தொடர்பான வழக்கில், ‘தனது அடுத்தடுத்த படங்களிலும் ஆளும் கட்சியை விமர்சிப்பதை யாரும் தடுக்க முடியாது. அது தன் கருத்துரிமை' எனக் கூறியிருந்தார் முருகதாஸ். இந்நிலையில், நாற்காலி என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











