Rajini Vijay: “ரஜினி, விஜய்யை ஒரே படத்தில் இயக்க ஆசை..” நெல்சனின் புது ஐடியா இதுதானா..?
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் எதிர்பார்த்ததைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பீஸ்ட் படத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த நெல்சனுக்கு, ஜெயிலர் சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளது.
அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அண்ணாத்த தோல்விக்குப் பின்னர் ஜெயிலரில் மீண்டு வந்துவிட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி, விஜய் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என தனது விருப்பத்தை மனம் திறந்துள்ளார் இயக்குநர் நெல்சன்.
ரஜினி, விஜய்யை ஒரே படத்தில் இயக்க ஆசை: கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன், அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், விஜய்யுடன் கூட்டணி வைத்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வெற்றியால் தான், விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்புகளும் நெல்சனுக்கு கிடைத்தன. ஆனால், கடந்தாண்டு வெளியான பீஸ்ட் நெகட்டிவான விமர்சனங்களால் படு தோல்வியடைந்தது.
விஜய், நெல்சன் என இருவருக்குமே இந்தப் படம் பெரிய அடியாக விழுந்தது. இதனால் ஒருகட்டத்தில் ரஜினியின் படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் நெல்சன் மீது நம்பிக்கை வைத்த சூப்பர் ஸ்டார், துணிந்து ஜெயிலர் படத்தில் நடித்துக் கொடுத்தார். ரஜினியின் நம்பிக்கையை மோசம் செய்திடாத நெல்சன், ஜெயிலரை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்களிடம் இருந்து நெல்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி ஜெயிலர் ஹீரோ ரஜினி, பீஸ்ட் நாயகன் விஜய், தனுஷ் என ஏராளமான திரை பிரபலங்களும் நெல்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதனால் நெல்சன் கடும் உற்சாகத்தில் உள்ளதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். நெல்சனின் அடுத்த படம் குறித்தும் அதில் யார் ஹீரோ என்பது பற்றியும் பெரிய விவாதமே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் நெல்சன். அதில், ஜெயிலர் படம் குறித்தும் ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் மனம் திறந்துள்ளார். மேலும், ரஜினி, விஜய் இருவரது பாடி லேங்குவேஜ் ரொம்ப இயல்பாகவும் ஒரேமாதிரியாகவும் இருக்கும். அதனால், அவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு என்றுள்ளார்.
ஆனாலும், அது அவ்வளவு எளிதானது இல்லையென்றும், கதை எழுதிய பின்னரே ரஜினி, விஜய்யை அதில் நடிக்க வைக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், தான் அதிகமாக பார்த்த விஜய் படம் ஷாஜகான் எனவும் நெல்சன் கூறியுள்ளது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல், ஜெயிலர், பீஸ்ட், டாக்டர், கோலமாவு கோகிலா படங்களின் சீக்வெல் எடுப்பேன் எனவும் நெல்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications