Rajini VS Vijay: ரஜினியின் வேட்டையனுக்கு குறிவைத்த GOAT... தீபாவளி ரேஸில் விஜய்யின் மாஸ்டர் பிளான்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. அதேபோல் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே தற்போது தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்டையனுடன் மோத தயாராகும் கோட்
தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே பாக்ஸ் ஆபிஸ் மோதல் சூடு பிடித்துள்ளது. எந்த ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்கிறது என்பது ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. முக்கியமாக ரஜினி - விஜய் இருவரின் படங்களுக்கு தான் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளியில் ரஜினி - விஜய் இருவருமே நேருக்கு நேர் மோதி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டவுள்ளதாகத் தெரிகிறது. சூப்பர் ஸ்டார் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினியுடன் ஃபஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வேட்டையன் ஷூட்டிங் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிய தாமதமாகும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வேட்டையன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வருகிறதாம்.
இன்னொரு பக்கம் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வருகிறது. அதேபோல் விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார். இதனால் கோட் படத்தை தீபாவளிக்கு வெளியிடலாமா என ஆலோசனை செய்து வருகிறாராம். தீபாவளி ரிலீஸில் வரும் போது விஜய்க்கும் பெரிய ரீச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரஜினியின் வேட்டையனுக்குப் போட்டியாக விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் டைம் தீபாவளி ரேஸில் களமிறங்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் கமலின் இந்தியன் 2 ரிலீஸ் தேதியும் இன்னும் முடிவாகவில்லை. அந்தப் படமும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி வேட்டையன், இந்தியன் 2, கோட் படங்கள் தீபாவளிக்கு வெளியானால் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகள் வசூலாகும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











