Rajinikanth 75: நிம்மதி குறித்து கச்சிதமாக கணித்து சொன்ன ரஜினிகாந்த்.. இது தலைவர் தத்துவம்!
சென்னை: வரும் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று கூறலாம். நம்முடைய சூப்பர் ஸ்டார், நம்முடைய தலைவர் ரஜினிகாந்த்துக்கு 75வது பிறந்த நாள். கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரஜினிகாந்த் பல நேரங்களில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பவராக உள்ளார். அவரது பேச்சு, நடவடிக்கை, செயல்பாடுகள் மற்றும் ஆர்வமாக அவர் ஈடுபடுவது உள்ளிட்டவற்றால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர் தனது ரசிகர்களுக்கு தனது படங்களில் தத்துவங்கள் மூலம் பல அறிவுரைகளைச் சொல்லி உள்ளார்.
அவரது இந்த தத்துவங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, " பரவாயில்ல சார், உங்க இடத்துல நான் இருந்திருந்தால் கூட இப்படித்தான் செஞ்சு இருப்பேன். கேவலம் நாம எல்லாம் மனுசங்க தானே. ரெண்டு கை, ரெண்டு கால் போனாலும் பொழச்சுக்குவேன்.. கெட்டப்பய சார் இந்த காளி" என்று அவர் முள்ளும் மலரும் படத்தில் பேசும் வசனம் இன்றைக்கும் பலருக்கும் நம்பிக்கை ஊட்டும் வசனமாக உள்ளது.

அதேபோல், ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டுடுவான். நல்லவங்கள சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் என்ற தத்துவங்களும் அவரது ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிற வாழ்க்கை மீதான பிடிப்பை அதிகப்படுத்துகிறது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். படத்திற்கு படம் சம்பளம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் அவர் எவ்வளவு நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் நிம்மதி குறித்து அவரது பார்வை என்பது தொடக்கத்தில் பணம் பொருள் சார்ந்து தான் இருந்துள்ளது.
எது நிம்மதி: ஆனால் அதன் பின்னர் நிம்மதி குறித்த அவரது பார்வை மாறியுள்ளது. ஒருமுறை நடிகர் விவேக்குடன் கலந்துரையாடி கொண்டு இருந்தபோது, தான் ஆசைப்பட்டது, ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட், தனக்கென தனி ஸ்கூட்டர், மாலை நேரத்தை நிம்மதியாக செலவு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால் ஆண்டவன் எனக்கு நிறைய கொடுத்துவிட்டான். நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியுடன் பேசுகையில், இப்போது நிம்மதி என்று எதை நினைக்குறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு, நிம்மதி என்பது, பணத்திலோ, பொருளிலோ இல்லை. வைரமுத்து சொன்னதைப் போல நிம்மதியை விலைக்கு யாராலும் வாங்க முடியாது. வேண்டுமானால், வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் நிம்மதி என்பது மனசுக்குள் தான் இருக்கிறது.

வாழ்க்கைத் தத்துவம்: ஒன்றின் மீது ஆர்வமும் ஆசையும் இருக்கிறது என்றால் அவை அனைத்தும் அது கிடைக்கும் வரை மட்டும் தான். அது கிடைத்துவிட்டால் அதன் மீதான ஆசையும் ஆர்வமும் போய்விடும். எனவே வாழ்க்கையில் சில நமக்கு கிடைக்காமல் இருப்பது நல்லது. சில கிடைக்காமலே இருக்கலாம் அதுவும் நல்லது" என்று தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாருக்கு சொத்து, புகழ், மரியாதை என எல்லாம் இருந்தும், நிம்மதி என்பது அவற்றில் எல்லாம் இல்லை அது மனதிற்குள் தான் இருக்கிறது என்பதை அவர் கூறியது சினிமாக்களில் அவர் சொன்ன தத்துவங்களை காட்டிலும் ஆகச் சிறந்த வாழ்க்கைத் தத்துவம் எனலாம்.


Click it and Unblock the Notifications











