Rajinikanth 75: HBD தலைவா.. ஒரு கிராமத்து ரசிகனின் வாழ்த்து.. ரத்தத்தில் கலந்தவர் ரஜினி
ஈரோடு: உண்மையைச் சொல்லப்போனால் உங்கள் மீதோ அல்லது உங்கள் படங்கள் மீதோ அவ்வளவு ஈர்ப்பு எல்லாம் சின்ன வயதில் இருந்ததில்லை தலைவா. ஆனால் இன்றைக்கு உங்கள் படம் வெளியாகிறது என்றால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியுமா என முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். சன் டிவியும் பொதிகை சேனலையும் தவிர மற்ற சேனல்கள் எல்லாம் இருக்கிறது என்று எங்கள் ஊர் தெரிந்து கொண்டதே கலைஞர் டிவி கொடுத்த பின்னர் தான். அதுவரை பலரது வீட்டில் மின்சாரமே இருந்தது இல்லை. ஆனால் பெரும்பாலான வீட்டில் உங்கள் முகம் இருக்கும், அது செய்தித் தாள்களில் வரும் பட விளம்பரங்களை வெட்டி எடுத்து வீட்டுச் சுவர்களிலோ, கதவுகளிலோ ஒட்டி வைத்திருப்பார்கள்.
சிலர் எல்லாம் சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் சினிமா கொட்டாய்களில் உங்கள் படங்கள் ஓடும் போது, ஊருக்குள் ஒட்டப்படும் போஸ்டர்களை கொஞ்சம் கூட டேமேஜ் இல்லாமல் கிழித்து வந்து வீட்டில் ஒட்டி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் உங்களை தங்களின் மனதின் உச்சத்தில் வைத்துக் கொண்டாடுகிற, இன்னும் சொல்லப்போனால் துதிக்கிற ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் உடல்நிலை சரியில்லாத காலத்தில் குணமடைய வேண்டும் என மொட்டை அடித்துக் கொண்ட ரசிகர்களும் எங்கள் ஊரான செங்கோடம்பாளையத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் பிறந்தநாளுக்கு, எங்கள் ஊர் சாலையில் சுண்ணாம்பைக் கரைத்து வாழ்த்துச் செய்தி எழுதுவது தொடங்கி, அன்று இரவு உங்களின் ஹிட் படங்களை ஊருக்கு நடுவே திரைகட்டி படம் ஓட்டுவது, அனைவருக்கும் சாக்லெட் கொடுப்பது, நள்ளிரவில் யாருக்கும் தூக்கம் வந்துவிடக் கூடாது என்று, அனைவருக்கும் டீ ஏற்பாடு செய்வது என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள் எங்கள் ஊர் ரஜினி ரசிகர்கள். இவற்றில் எல்லாம் அதி தீவிர ஆர்வம் காட்டுபவர் மகாலிங்கம் மாமா தான்.
வெறித்தனமான ரஜினி ரசிகர்கள்: நன்றாகவே நினைவில் இருக்கிறது, முத்து படத்தையும் முரட்டுக் காளை படத்தையும் ஊருக்குள் திரையிடும் போது, இரண்டு படத்தின் ஓப்பனிங் பாடலை பலமுறை ஒன்ஸ்மோர் போடச் சொல்லி, அலப்பறை செய்தவர் அந்த மகாலிங்கம் மாமா தான். உங்களது பல வெற்றிப் படங்களை இப்படி திரையிடுவதிலும், எங்கள் ஊர் பெட்டிக்கடைக்காரின் டிவியிலும் தான் பார்த்திருக்கிறேன். பாட்ஷா, மூன்று முகம், மனிதன், அண்ணாமலை, முரட்டுக்காளை, முத்து, வேலைக்காரன், படிக்காதவன், ராஜாதி ராஜா, பில்லா, சிவாஜி, சந்திரமுகி, இன்று ரீ ரிலீஸ் ஆகும் படையப்பா என பல படங்களை நானும் எனது ஊரும் அப்படித்தான் பார்த்தது. பலர் அருகில் இருக்கும் சினிமா கொட்டாய்களுக்குச் சென்றும் பார்த்து வருவார்கள். உங்களின் பல படங்களின் ஒலிச்சித்திரம் கேட்டது எல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது.

திரை அனுபவம்: உங்கள் பிறந்த நாள் எங்களுக்கு மனப்பாடமாகத் தெரியாது. ஆனால் தினசரி காலண்டரில் டிசம்பர் 12 என்றால் உங்கள் முகத்துடன், இன்று ரஜினி பிறந்த நாள் என்று எழுதி இருக்கும் அன்றைக்கு அதை பார்த்தால் காலையிலேயே தெரிந்து கொள்வேன், இல்லை வானொலிகளில் சொல்வதைக் கேட்டு தெரிந்து கொள்வேன். இவையெல்லாம் இல்லை என்றாலும் மாலையில் ரஜினி ரசிகர்கள் வீடு வீடாக வந்து, இன்னைக்கு தலைவர் பொறந்த நாள், ரெண்டு படம் ஓட்டலாம்னு இருக்கோம், பொழுதாடைக்கு(இரவு) எல்லாம் சீக்கிரமா கோயில் கிட்ட வந்துடுங்க" என்று சொல்லிச் செல்வார்கள்.
நான்காவது தலைமுறை: அவ்வளவுதான், 8 மணிக்குத்தான் படம் ஓட்டும் ஆப்ரேட்டர் ஊர்க்குள் வருவார். ஆனால் நானும் எனது வயதுடையவர்களும் 7 மணிக்கே பாய், தென்னங்கீற்று மற்றும் போர்வையுடன் கோவிலுக்கு அருகில் சென்று இடம் பிடித்து அமர்ந்து கொள்வோம். உங்கள் பிறந்த நாள் சாக்லெட்டுக்காக எல்லாம் சில தில்லாலங்கடி வேலைகளைக் கூட பார்த்துள்ளோம். எனக்கு அருகில் எனது தாத்தா இருப்பார், எங்களுக்கு பின்னால் எனது அப்பா இருப்பார், இப்படி மூன்று தலைமுறைகளும் ஒன்றாக அமர்ந்து உங்கள் படத்தைப் பார்த்து கொண்டாடி உள்ளோம். இன்றைக்கு நான்காவது தலைமுறையாக எனது இரண்டு வயது மகளும் உங்கள் பட பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டு இருக்கிறாள்.

ரத்தத்தில் கலந்தவர் ரஜினி: எங்களைத் திட்டும்போதோ அறிவுரை சொல்லும்போதோ, உங்கள் சினிமா வசனங்களை உவமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார் எனது தாத்தா. அந்த அளவுக்கு நீங்கள் இந்த தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டீர்கள். ஸ்டைல் மட்டும் தான் உங்களுக்கு வரும் என்று சிலர் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் போது, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், ஜானி, கபாலி, காலா என பல படங்களைக் கொடுத்து, ஆர்ட் ஃபிலிம்களுக்கும் தான் ஒரு அட்டகாசமான மெட்டீரியல் என்று நிரூபித்து வருகிறீர்கள்.
ஒரே சூப்பர் ஸ்டார்: 50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை, 171 படங்கள், ஒரே சூப்பர் ஸ்டார், ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் , அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், உன் அலும்ப பார்த்தவன் உன் அப்பன் விசிலக் கேட்டவன், உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன், Genz உன்ன பத்தி பேசுதா போன்ற வரிகளும் வார்த்தைகளும் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு எல்லாம் தகுதியானவர் நீங்கள் ஒருவர் மட்டும் தான். கடந்த நான்கு தலைமுறைகளாக எங்களுக்கு கொடுத்து வரும் இந்த உற்சாகத்தை நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் கொடுத்துக் கொண்டே இருங்கள், என்பது மட்டும் தான் பலரது கோரிக்கை. பிரியப்பட்ட முத்தங்களுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.



Click it and Unblock the Notifications











