ரஜினிகாந்தும் இல்லை கமல்ஹாசனும் இல்லை.. ஹீரோ கிடைக்காமல் அட்லீ நிலைமை இப்படி ஆகிடுச்சே!
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய பிகில் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்க 4 வருடங்களாக போராடி வந்த அட்லீ கடந்த ஆண்டு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார்.
ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், அடுத்த செப்டம்பர் விரைவில் வந்துவிடும் நிலையில் இன்னமும் அட்லீ தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை.

அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியானது. லேட்டஸ்ட்டாக சல்மான் கானை வைத்து அட்லீ இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அட்லீ படத்தில் ரஜினிகாந்த்?: அட்லீ இயக்கத்தில் சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ரஜினிகாந்த் இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு படு பிசியாக இருப்பதால் அட்லீ படத்தில் நடிக்க மாட்டார் எனக் கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பில் இன்று நடிக்க தொடங்கியுள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனும் இல்லை: ரஜினிகாந்துக்கு பதிலாக கமல்ஹாசனை வைத்து அட்லீ, சல்மான் கான் படத்தை பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் வெறும் வதந்தி தான் உண்மை இல்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் கல்கி 2 படத்திற்கு நிறைய நாள் கால்ஷீட் தர வேண்டி இருக்கிறதாம். மேலும், அன்பறிவ் மாஸ்டர் இயக்கத்தில் கமிட்டான படத்தில் நடித்து முடித்து விட்டு தான் அவர் ஃப்ரீயாவார் என்றும் அதுவரை அவர் செம பிஸி என்றும் கூறுகின்றனர்.
அட்லீக்கு ஹீரோ கிடைக்கவில்லையா?: ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் மிகப்பெரிய சம்பவம் செய்து பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய அட்லிக்கு அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்கவில்லையா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இயக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்ய பேபி ஜான் எனும் பாலிவுட் படத்தை தயாரித்து வரும் அட்லீ அதில் சிறப்பு கேமியோவாக நடிக்கப் போவதாக கூறுகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வரும் சல்மான் கானும் அடுத்த ஆண்டு ரம்ஜான் வரை பிஸி என்பதால், அட்லீ படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.
மெகா புராஜெக்ட்: எப்போது அட்லீ படம் ஆரம்பித்தாலும் பெரிய பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்ட படத்தையே கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெறி இந்தி ரீமேக் படமான பேபி ஜான் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்துக்கான புரொமஷன்களை செய்ய அட்லீக்கு நிறையவே நேரம் கிடைக்கும் என்கின்றனர். கூடிய சீக்கிரமே அட்லீயின் அடுத்த படத்தின் அப்டேட் வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











