Rajinikanth: 43வது ஆண்டு.. குறையாத அன்பு.. இன்று திருமண நாள் கொண்டாடும் ரஜினிகாந்த்!
சென்னை: சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களாலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 72 வயதிலும் மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். ஸ்டைல் சாம்ராட்டாக இருக்கும் ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெறித்தனமான ரெஸ்பான்ஸ் உடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஓடியது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

43வது ஆண்டு திருமண நாள்: கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திருப்பதி கோயிலில் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை ஒருவரை ஒருவர் பிரியாமல் அன்பு மாறாமல் தம்பதியினராக ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் வாழ்ந்து வருகின்றனர். 43 ஆண்டுகளை இருவரும் இணை பிரியாமல் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இரு மகள்களும் விவாகரத்து: கடைசி வரை மனைவியை கை விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் இந்த வயதிலும் நினைத்து வருகிறார். கடைசி வரை கணவனை விட்டு விலகக் கூடாது என லதா ரஜினிகாந்தும் திருமண உறவை பலப்படுத்தி வருகிறார். ஆனால், ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் முதல் கணவரை பிரிந்து விட்டனர். செளந்தர்யா ரஜினிகாந்த் 2ம் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
அண்ணாமலைக்கு கூட்டம் அள்ளுது: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதா ரவி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான அண்ணாமலை திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கூட்டம் அள்ளுது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று திரையிட்ட காட்சிகள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கைகள் நிரம்பியும் சில இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவும் ஓடின.

லால் சலாம் ஒரு ஷோ கூட: ஆனால், சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் 40 நிமிடங்கள் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையிலும், அந்த படத்தின் ஒரு ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை என சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
வேட்டையன் மாஸ் கிளப்பும்: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பிசியாக உள்ளார். சம்மருக்கு வேட்டையன் வரும் தீபாவளிக்கு தலைவர் 171 வரும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், வேட்டையன் படமே இந்த ஆண்டு தீபாவளிக்குத்தான் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படம் வந்தால் தான் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











