குபேரா வெற்றியால் கூலிக்கு அடித்த ராஜயோகம்.. தெலுங்கில் இத்தனை கோடிக்கு பிசினஸா?.. மிடாஸ் நாகார்ஜுனா!
சென்னை: ஓவர்சீஸ் பிசினஸ் ஓஹோ என சென்ற நிலையில், அடுத்ததாக தெலுங்கு திரையுலக பிசினஸும் கூலி படத்துக்கு அமோகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான குபேரா திரைப்படம் டோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை அங்கே நடத்தி வருகிறது.
அந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது தான் இத்தனை பெரிய வரவேற்புக்கு காரணம் என்கின்றனர். அதே மிடாஸ் டச் உடன் நாகார்ஜுனா நடித்துள்ள கூலி படத்தின் பிசினஸும் கொடி கட்டிப் பறப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய சினிமாவே இந்த ஆண்டு அடுத்து எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் பெரிய படமாக ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் மாறியிருக்கிறது.
ஒரே நம்பிக்கை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்கள் இதுவரை வெளியானாலும், எந்தவொரு படத்தாலும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியவே இல்லை. இளம் நடிகர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அதிசயிக்க வைத்து வருகின்றன. ஆனால், பல கோடி ரூபாய் செலவில் வெளியாகும் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து விடுகின்றன. விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ரெட்ரோ, தக் லைஃப் போன்ற பெரிய படங்களில் குட் பேட் அக்லி மட்டுமே 200 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அடுத்த பெரும் நம்பிக்கையாக இருப்பது ரஜினிகாந்தின் கூலி படம் மட்டுமே.
குபேரா வெற்றி: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் குபேரா திரைப்படம் 62 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் 80 கோடி ரூபாய் வரை படத்திற்கான வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. படத்தின் நாயகனே தான் என நாகார்ஜுனா சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய நிலையில், அவரது நடிப்பையும் தனுஷின் நடிப்பையும் காணவே ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு ரைட்ஸ் பல கோடிக்கு பிசினஸ்: குபேரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர், உபேந்திரா மற்றும் அமீர்கான் நடித்துள்ள கூலி திரைப்படத்துக்கும் மிகப்பெரிய பிசினஸ் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வேதாக்ஷரா மூவிஸ் பேனரின் நிறுவனர் ராமராவ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை அதிகபட்சமாக 46 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓவர்சீஸில் மாஸ் பிசினஸ்: ஏற்கனவே ஓவர்சீஸில் 81 கோடி ரூபாய்க்கு கூலி படம் விற்பனையாகி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அடுத்ததாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் படத்தை வாங்க பலரும் போட்டி போட்டு வருவதாக கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே இந்தி பெல்ட்டிலும், கர்நாடகா மற்றும் கேரளாவிலும் படத்தை பெரிய தொகைக்கு விற்பனை செய்ய சன் பிக்சர்ஸ் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜிகிடு வைப்ஸ் பாடல் வெளியான பிறகு மேலும், வியாபாரம் சூடு பிடிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











