பாபா படச் சுருளை திருடி எரித்த வழக்கில் 22 பாமகவினர் விடுதலை

ரஜினிகாந்த், மனிஷாகொய்ராலா நடித்த பாபா திரைப்படம் 2002 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு எதிராக வட தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினரும், பாமகவினரும் கடும் போராட்டத்தில் குதித்தனர். பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்குதலுக்குள்ளாகின. இதனால் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஸ்ரீரங்கா திரையரங்கில் புகுந்த சிலர் தியேட்டரை சேதப்படுத்தி பாபா படச்சுருள் அடங்கிய பெட்டி கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்தி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 22 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. இறுதியில், நேற்று தீர்ப்பை அளித்த நீதிபதி சிவக்குமார், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வைத்தி, ரங்கநாதன் உள்பட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications