ரஜினிகாந்த் பிறந்தநாள் ட்ரீட்.. இன்று வருகிறது கூலி அப்டேட்.. வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் கூலி படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக லோகேஷின் படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள் அவர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்துக்கு முன்பாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவரது சாம்ராஜ்ஜியம் சாய்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட சூழலில்; ஜெயிலர் படம் அந்தப் பேச்சை மாற்றி வைத்தது. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கூலி கூட்டணி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் கமிட்டானார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
லோகேஷுக்கும் முக்கியமான படம்: அதேபோல் லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் இயக்கிய படங்களில் லியோ திரைப்படம்தான் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக அந்தப் பெயரை கூலி படத்தில் மாற்ற வேண்டுமென்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அவர். இதற்காக ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து அவர் செதுக்கியிருப்பதாகவும்; கமல் ஹாசனுக்கு கொடுத்ததுபோல் ரஜினிக்கும் மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டுமென்றும் அவர் நினைப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
பிறந்தநாள் ட்ரீட்: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக இன்று மாலை ஆறு மணிக்கு கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறது. அநேகமாக படத்தின் டீசர் இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் என்ன மாதிரியான அப்டேட் வரும் என்பது தொடர்பாக ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











