கொடி பறக்குது.. ட்விட்டர் புரொஃபைல் பிக்சரை தேசிய கொடியாக மாற்றினார் ரஜினிகாந்த்!
சென்னை: பாலிவுட், மலையாள திரையுலகத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள் தங்களின் புரொஃபைல் பிக்சரை தேசியக் கொடியாக மாற்றிய நிலையில், கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஏன் மாற்றவில்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை வைத்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தேசியக் கொடியை வைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் அதை கொஞ்சம் கூட பின்பற்றாமல் இருந்து வந்தனர்.

பிரதமர் கோரிக்கை
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை டிபியாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைக்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும், தேசியக் கொடியை டிபியாக அவர் மாற்றி உள்ளார்.

மோகன்லால், மம்மூட்டி
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கேரள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, உன்னி முகுந்தன் உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது டிபியாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். மேலும், இந்தியன் என கூறிக் கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்கிற வாசகத்தையும் கேப்ஷனாக வைத்துள்ளனர்.

கிளம்பிய விமர்சனம்
ஆனால், கோலிவுட்டில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இயக்குநர் பார்த்திபன், சிவகார்த்திகேயன், தனுஷ் என எந்தவொரு முன்னணி நடிகர்களும் தேசியக் கொடியை டிபியாக வைக்கவே இல்லை. சமூக வலைதளங்களில் பிரதமர் பேச்சுக்கு கோலிவுட் பிரபலங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்கிற விமர்சனம் எழுந்தது.

கொடி பறக்குது
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை புரொஃபைல் பிக்சராக வைத்து தனது தேசிய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். கோலிவுட்டின் மற்ற நடிகர்களும் ரஜினிகாந்தின் வழியை பின்பற்றி போட்டோக்களை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஜெயிலர் ஆரம்பம்
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்துக்கு பண்ணது போல பெரியளவில் பூஜை எல்லாம் போடாமல் எளிமையான முறையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications