ஒரே மேடையில் 3 சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயிலர் 2வுக்கு ரஜினிகாந்துக்கு செம கேமியோ சிக்கிடுச்சு போல!
சென்னை: ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேலும், ரஜினிகாந்த் அருகே இரண்டு பெரிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றார். பவன் கல்யாணின் சகோதரரான சிரஞ்சீவி மற்றும் என்டிஆரின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் ரஜினிகாந்த் உடன் இணைந்து இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா அருகருகே அமர்ந்துள்ள காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதனை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
தென்னிந்தியாவில் கால் பதித்த பாஜக: வட இந்தியாவில் பல்வேறு இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக தென்னிந்தியாவில் கால் வைக்க திணறிக் கொண்டிருந்த நிலையில், தெலுங்கு நடிகர்கள் சிகப்பு கம்பளம் விரித்து பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் இடத்தை கொடுத்துள்ளனர். பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றிப் பெற்ற நிலையில், தென்னிந்தியாவில் ஆந்திராவில் அழுத்தம் திருத்தமாக பாஜக உள்ளே நுழைந்து விட்டது.
மனைவியுடன் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றாலும், ஆந்திர அரசியலில் அவரது வாய்ஸ் அதிகம் வேலை பார்த்து இருப்பதாக கூறுகின்றனர். சந்திரபாபு நாயுடு ஜெயிக்க முக்கிய காரணமே ரஜினியின் வாய்ஸ் தான் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், பதவியேற்பு விழாவில் தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் ஆந்திரா சென்றுள்ளார். ஏற்கனவே அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கும் தனது மனைவியுடன் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அதே போல அம்பானி மகன் திருமண விழாவுக்கும் தனது குடும்பத்தினருடன் சென்று கலந்துக் கொண்டார்.
3 சூப்பர் ஸ்டார்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் டோலிவுட் சூப்பர் ஸ்டார்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி இருவரும் அருகருகே அமர்ந்துக் கொண்டு பேசும் காட்சிகள் எல்லாம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ரஜினிகாந்துக்கு பின் வரிசையில் ஓபிஎஸ் அமர்ந்திருக்கிறார்.
ஜெயிலர் 2வுக்கு ஆள் சிக்கிடுச்சு: நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்தனர். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ரஜினியுடன் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுகுறித்து தான் தலைவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள கூலி படத்திலும் பக்கத்து ஸ்டேட் முன்னணி நடிகர்களை லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் சத்யராஜை மட்டும் வைத்து படத்தை நகர்த்த முடியாது என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. விரைவில் ரஜினிகாந்த் உடன் அடுத்து யாரெல்லாம் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











