மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்பு!
சென்னை: அப்பு என செல்லமாக கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.

புனித் ராஜ்குமார் மறைவு
1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடக ரத்னா
பாரத ரத்னா விருது போல கர்நாடக ரத்னா எனும் விருதினை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் வழங்கப்படும் விழா வரும் நவம்பர் 1ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு வழங்க உள்ளார். இதுவரை 9 பிரபலங்களுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி 10வது விருது வழங்கப்பட உள்ளது.

ரஜினிகாந்துக்கு அழைப்பு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சமீபத்தில் கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி கூட நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில், அந்த அழைப்பு குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகி உள்ளது.

கண்டிப்பா வரேன்
நம்ம அப்பு புனித் ராஜ்குமார் மறைந்த பிறகு அவரை சிறப்பிக்கும் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் என்னை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்தது பெரும் மகிழ்ச்சி கண்டிப்பாக வரும் நவம்பர் 1ம் தேதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கடிதம் வெளியாகி உள்ளது.

தொடர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். ரிஷப் ஷெட்டி, ராகவா லாரன்ஸ், குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கிற்கு தற்காலிகமாக லீவு விடப்பட்டுள்ளதா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











