என் அன்பு தாய் ஐஸ்வர்யா.. லால் சலாம் வெற்றி பெற.. மகளுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ளதால், படம் வெற்றி அடைய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா: இப்படத்தின் இசை வெளியீடு விழாவில், ஐஸ்வர்யா, எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது, அவர் சங்கியாக இருந்தால், இந்த படத்தில் நடித்து இருக்க முடியாது என்று பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை என ரஜினி விளக்கம் கொடுத்திருந்தார்.
அனல் பறந்த வசனங்கள்: இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியானது. அதில், யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை என்ற வனமும், எந்த ஊர் சாமியா இருந்தாலும், யார் கும்பிடும் சாமியா இருந்தாலும், சாமி சாமிதான் என்று அடுத்தடுத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் லால் சலாம் டிரைலரில் வசனங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
சுவாரசியத் தகவல்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம், தமிழகம் ஆந்திரா, தெலுங்கானாவிலும் இன்று வெளியாகி உள்ளது. வழக்கமாக ரஜினி படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படும் போது பாடகர் மனோ ரஜினிக்காக டப்பிங் பேசுவார். ஆனால், லால் சலாம் படத்துக்கு நடிகர் சாய் குமார் டப்பிங் பேசியுள்ளார். சாய் குமார் இதற்கு முன் பெத்தராயுடு, பாட்ஷா படங்களுக்கு ரஜினிக்காக டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் இருப்பதாகவும், நிமிடத்திற்கு அவர் ரூ. 1 கோடி என்ற கணக்கில் ரூ. 40 கோடி பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி வாழ்த்து: இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் வெற்றி பெற தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் லால் சலாம் படம் வெற்றிபெற ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











