நெப்போலியன் மகனுக்கு வாழ்த்து சொல்லி வாக்கை நிறைவேற்றினாரா ரஜினி?.. இருவர் சந்திப்பின் பின்னணி என்ன?
சென்னை: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. எனவே சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் நெப்போலியனின் மகனுக்கும், அக்ஷயா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை நெப்போலியன் சந்தித்ததன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் மூத்த மற்றும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். கதாநாயகன் மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து அசத்திய அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பத்து வயதில் கண்டறியப்பட்டது.
அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன்: இதற்கிடையே அரசியலிலும் காலடி வைத்த நெப்போலியன் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கான சிகிச்சை இந்தியாவைவிட அமெரிக்காவில் சிறப்பாக கிடைக்கும் என்பதால்; குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தும்; மென்பொருள் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தியும் வருகிறார் நெப்போலியன்.

ஜப்பானில் நடந்த திருமணம்: தொடர்ந்து தனுஷுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார் நெப்போலியன். தனுஷை அக்ஷயாவுக்கும் பிடித்து போனதை அடுத்து இருவருக்குமான திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
படையெடுக்கும் பிரபலங்கள்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்புதான் மாதம்பட்டி ரங்கராஜ், பரிதாபங்கள் கோபி& சுதாகர் ஆகியோர் அமெரிக்காவில் நெப்போலியன் வீட்டுக்கு சென்று தனுஷை சந்தித்துவிட்டு வந்தனர். இதற்கிடையே தனுஷின் திருமணத்துக்கு ரஜினிக்கும் பத்திரிகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ரஜினியால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அமெரிக்காவுக்கு வரும்போது கண்டிப்பாக நேரில் வீட்டுக்கு வருகிறேன் நெப்போலியனிடம் ரஜினி கூறியதாக அப்போது தகவல் வெளியாகின.
நடந்த சந்திப்பு: இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் வைத்து நெப்போலியன் சந்தித்திருக்கிறார். அப்போது ரஜினிகாந்த்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சால்வை அணிவித்தார். அதுதொடர்பான வீடியோவை நெப்போலியனின் நண்பர் தனது இன்ஸ்டாகிராமி பகிர்ந்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது தனுஷின் உடல்நிலை, திருமணம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் தனுஷிடம் பேசி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் இது புது வீடியோ இல்லை; மகனின் திருமணத்துக்கு பத்திரிகை வைத்தபோது எடுக்கபப்ட்ட வீடியோ என்றும் ஒருதரப்பினர் கூறுகிறார்கள். முன்னதாக, ரஜினிக்கு வில்லனாக எஜமான் படத்தில் நெப்போலியன் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











