Rajini - ரஜினியின் அப்பா புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்.. அப்படியே இருக்காரே
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே அவரது மகள் இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜெயிலர் படம் போல் இந்தப் படமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடுத்ததாக அவர் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.

ரஜினியின் குடும்பம்: ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்து வளர்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. அவரது அண்ணன் சத்யநாராயணா, நண்பர் ராஜ் பகதூர் உள்ளிட்டோரை ரசிகர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள். ஆனால் அவரது தந்தையின் புகைப்படத்தை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த்தும் அவரது தந்தை ராமோஜி ராவும் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் ரஜினிகாந்த் தனது இளமை காலத்தில் க்ளீன் ஷேவ் செய்தபடி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தைத்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் பகிர்ந்துவருகிறார்கள். ரஜினியின் தந்தை ராமோஜி ராவ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தார் என்பதும்; வீட்டில் பயங்கர ஸ்ட்ரிக்ட்டாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











