PS 2 ரிலீஸுக்கு சிக்கல்... ரஜினியை தேடிப்போன மணிரத்னம்: வேறு வழியில்லாமல் பின்வாங்கும் ஜெயிலர்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் மிகப் பெரியர் நட்சத்திர கூட்டணியே களமிறங்கியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், ஏப்ரல் 28ம் தேதி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாவதால், ஜெயிலர் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது.

மெகா கூட்டணியில் ஜெயிலர்
ரஜினி நடிப்பில் 2021 தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து தற்போது தரமான ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர்.

ரிலீஸ் தேதியில் குழப்பம்
மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரக் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாகவே ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனிடையே இந்தப் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ஜெயிலர் ரிலீஸ் தேதி என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
இன்னொரு பக்கம் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதனால் ஜெயிலர் திரைப்படம் சொன்னபடி வெளியாகுமா என்பதில் சந்தேகம் இருந்தது. இருப்பினும் ரஜினியை இயக்குநர் மணிரத்னம் நேரில் சந்தித்ததாகவும், ஜெயிலர் ரிலீஸ் தேதியை ஏப்ரலில் இருந்து ஒத்திவைத்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ரஜினி எடுத்த அதிரடி முடிவு
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பரில் ரிலீஸானது. பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை லைகா தயாரிக்கவுள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்க ரஜினி முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெயிலர் புதிய ரிலீஸ் தேதி?
ரஜினியின் அதிரடி முடிவால் மணிரத்னமும் லைகா நிறுவனமும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது. அதேநேரம் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி - கமல் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரேநாளில் ரிலீஸாகியிருந்தது.


Click it and Unblock the Notifications











