இந்தியன் தாத்தா வித்தையையும் சூப்பர் ஸ்டார் அப்பவே பண்ணிட்டாரே.. வர்மக் கலையில் மிரட்டும் ரஜினி!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் வர்மக்கலை மிகவும் முக்கிய அங்கமாக இடம்பெற்றது. 70 வயதில் இந்தியன் தாத்தா எப்படி ஒருவரை அட்டாக் செய்கிறார் என்பதற்கு அவருக்கு வர்மக்கலை தெரியும் என்கிற லாஜிக்கை இந்தியன் படத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் ஷங்கர் காட்டி இருந்தார்.
இந்தியன் படத்தில் அளவாக காட்டப்பட்ட வர்மக்கலை இந்தியன் இரண்டாம் பாகத்தில் ஓவர்டோஸ் ஆனது தான் படம் ரசிகர்களை கவரவில்லை என பலர் கூறுகின்றனர். வர்மக்கலை பாடத்தை வில்லன்களுக்கு கமல்ஹாசன் கருட புராணம் போல எடுக்க ஆரம்பித்தது தான் தவறு என்று பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், அந்த வர்மக் கலையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து தான் சுட்டது என்றும் இதெல்லாம் எங்க தலைவர் எப்போதோ செய்து விட்டார் என சூப்பர் ஹிட் படத்தின் சண்டைக் காட்சியை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

குதிரை ஓட்டம்: இந்தியன் படத்தில் வர்மக்கலையை கமல்ஹாசன் பயன்படுத்தும் போது பயந்த ரசிகர்கள் இந்தியன் 2-வில் அதே விஷயத்தை செய்து ஊழல்வாதிகளை பாட்டு பாடிக்கொண்டே இறப்பீர்கள் என்பதும் குதிரை போல பெரிய தொழிலதிபர் தனது வீட்டிலிருந்து சாலை வரை ஓடி மேம்பாலத்தில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்து இறக்கும் காட்சிகள் ரசிகர்களை வேறலெவலில் தியேட்டரை விட்டு குதிரை போலவே ஓடி வரும்படி வீடியோக்களை ரீல்ஸாகவே போட வைத்தது.
சிக்ஸ்பேக் வர்மக்கலை: தூங்க வைக்கும் வர்மம், ஓட வைக்கும் வர்மம், பாட வைக்கும் வர்மம், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வர்மம் அனைத்துக்கும் மேலாக சிக்ஸ்பேக் வரவைக்கும் வர்மக்கலை என 7ஆம் அறிவு போதி தர்மருக்கே டஃப் கொடுக்கும் விதமாக இந்தியன் 2 படத்தில் காட்டியது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு சமம் என ரசிகர்கள் வெறுத்தே போய் விட்டனர்.
ராஜா சின்ன ரோஜா: எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியான ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் வர்மக்கலையை பயன்படுத்தி சண்டை செய்யும் காட்சி ஒன்றை ரஜினிகாந்த் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து இதையெல்லாம் எங்க தலைவர் அப்போதே செய்து விட்டார் என கமல்ஹாசன் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











