Rajinikanth: இதனால 100 ஓட்டு கூட எக்ஸ்ட்ரா கிடைக்காது.. ஆனாலும் CM ஸ்டாலின்.. பளிச்சென பேசிய ரஜினி
சென்னை: தமிழ் சினிமாவின் முத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.வி.எம். அதன் உரிமையாளர் ஏ.வி. மெய்யப்பன். அவரது மகன் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம் சரவணன் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். 86வது வயதில் இயற்கை எய்திய அவரது உருவப்படம் திறக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதும், அதுவும் முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சூப்பர் ஸ்டார் பேசுகையில், " அவர்கள் படத்தில் நடித்தபோதுதான் நான் ஏ.வி. மெய்யப்பன் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அப்போதுதான் சரவணன் சாரையும் பார்த்தேன். 1975ஆம் ஆண்டு பார்த்தது, அதன் பின்னர் நெருக்கத்தில் பார்த்தது, முரட்டுக்காளை படம் பண்ணும் போது தான். அப்போதுதான் அவரை அலுவலகத்தில் சந்தித்தேன்.

அப்படி மிக நேர்த்தியான அலுவலகத்தை அதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை. அதன் பின்னரும் பார்க்கவில்லை. ஏ.வி.எம் தயாரிப்பில் நான் 11 படங்கள் பண்ணியிருக்கேன். சினிமா மட்டும் இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரவணன் சார் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார். மண்டபம் கட்டுவதற்கு, வீட்டுக்கு அருகில் இருக்கும் நிலத்தை வாங்குவதற்கு என பல உதவிகளைச் செய்துள்ளார்.
மரியாதை: அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டு இருந்தேன், அப்போது என்னிடத்தில் வருடத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்று சொன்னார். அதில் இருந்து இப்போது வரை வருடத்திற்கு ஒரு படம் என நடித்துக் கொண்டு உள்ளேன். திரைத்துறையை கடந்து வெளியேயும் அவருக்கு பெரும் மரியாதை உள்ளது. சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்து இருந்தோம். ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.

தேர்தல் நேரம்: அதேபோல் இன்றைக்கு சரவணன் சாரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார் வந்துள்ளார். அதுவும் அவருக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமான மற்றும் விலை மதிக்க முடியாத நாள். ஒவ்வொரு மணி நேரமும், நிமிடமும் விலை மதிக்க முடியாதது. அப்படி இருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் இங்கு வந்துள்ளார் என்றால், அது சரவணன் சார் மீது இருக்கும் மரியாதை.
முதலமைச்சர் ஸ்டாலின்: இங்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்துள்ளதால் அவருக்கு கூடுதலாக 100 ஓட்டுகள் கூட கிடைக்காது. அப்படி இருந்தும் வந்துள்ளார் என்றால் அதுதான் சரவணன் சார் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் எந்த அளவுக்கு அன்பு கொண்டவர் என்பதும் தெரிகிறது என்று பேசினார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











