Rajinikanth - துணை முதலமைச்சரோடு ஜெயிலர் படம்.. உத்தரப் பிரதேசத்தில் அலப்பறை கிளப்பிய ரஜினிகாந்த்
லக்னோ: Rajinikanth (ரஜினிகாந்த்) உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடிப்பில் ரிலீஸாகியிருக்கும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த பத்தாம் தேதி வெளியானது. தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களின் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதற்காக ஜெயிலர் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர் ரஜினியும், அவரது ரசிகர்களும்.

சூப்பர் ஹிட்: அவர்களது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துவிட்டது. நெல்சனின் டார்க் காமெடி, ரஜினியின் மாஸ் என கலந்துகட்டி பக்கா கமர்சியல் பேக்கேஜாக படம் உருவானது. முக்கியமாக படத்தின் பல இடங்களில் ரஜினிகாந்த்தை பார்க்கும்போது பழைய ரஜினிகாந்த் நினைவில் வந்து போனதாகவும்; இந்தப் படத்தின் மூலம் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் ஆகிய இரண்டு பேருமே கம்பேக் கொடுத்துவிட்டனர் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.
வசூல் சாதனை: படத்தின் வசூல் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. அதன்படி படமானது முதல் வாரத்தின் முடிவிலேயே 450 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது. விக்ரம் படத்தின் மொத்த வசூலை முறியடித்துவிட்டது என பேசப்பட்டது. ஆனால் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ஒரு வாரத்தின் முடிவில் 375 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவித்தது.
இமயமலை பயணம்: இதற்கிடையே படம் வெளியாவதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றார். பட ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றால் அந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை பல காலமாகவே அவரது ரசிகர்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படம் ஹிட்டானதற்கு ரஜினியின் இமயமலை பயணமும் ஒரு காரணம் என சிலர் கூறிவருகிறார்கள்.

அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு: இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்தார். இதனையடுத்து உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்புகளுக்கு பிறகு இன்று மாலை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சர்: இதற்கிடையே யோகி ஆதித்யநாத்துடன் அவர் லக்னோவில் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. அவர் யோகியை சந்திக்க மட்டுமே செய்வார். துணை முதலமைச்சரோடுதான் படத்தை பார்க்கவிருக்கிறார் என கூறப்பட்டது. அதன்படி உத்தரப் பிரதேசம் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ஜெயிலர் படத்தை பார்த்தார் ரஜினி. அவர்களுடன் ரஜினியின் மனைவி லதாவும் இருந்தார். தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











