Diwali 2023 - தீபாவளிக்கு நேரடியாக மோதிக்கொண்ட ரஜினி - கமல் படங்கள்?.. யாருக்கு அதிக வெற்றி தெரியுமா?
சென்னை: Diwali Movies (தீபாவளி திரைப்படங்கள்) தீபாவளி பண்டிகைக்கு இதுவரை ரஜினி படமும் கமல் படமும் 9 முறை நேரடியாக மோதியிருக்கின்றன.
தீபாவளி பண்டிகை என்றாலே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஒருபக்கம் புத்தாடை, பட்டாசு என பரபரக்க மறுபக்கம் புதிய படங்களின் ரிலீஸும் ஜொலிக்கும். காலையில் எழுந்து சம்பிராதயங்களை முடித்துவிட்டு தீபாவளி அன்று ரிலீஸாகும் படங்களுக்கு செல்வது ஒரு மிகப்பெரிய கடமையாகவே ரசிகர்களிடம் இருந்தது.

இந்த வருட தீபாவளி ரிலீஸ்: கோலிவுட்டில் தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் பத்து படங்கள்வரை ரிலீஸான சம்பவம் எல்லாம் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆவதே பெரிய விஷயமாக இருக்கிறது. அந்தவகையில் இந்த வருட தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா 2, ரெய்டு, கிடா ஆகிய நான்கு படங்கள் ரிலீஸாகின்றன. பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் இந்த வருட தீபாவளிக்கு நோ ரிலீஸ். இந்த சூழலில் ரஜினிகாந்த்தின் படமும், கமல் ஹாசனின் படமும் தீபாவளிக்கு ஒன்றாக எத்தனை முறை ரிலீஸாகியிருக்கின்றன; யாருக்கு அதிக வெற்றி என்பதை பார்க்கலாம்.
9 முறை; ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேருமே இந்திய சினிமாவின் அடையாளங்கள். அவர்கள் தங்களது இளமை காலத்தில் ஒரே வருடத்தில் பல படங்கள் நடித்திருந்தனர். இதுவரை இருவரது படங்களும் 9 முறை தீபாவளிக்கு ஒன்றாக ரிலீஸாகியிருக்கின்றன. அதாவது 1983ஆம் ஆண்டு ரஜினியின் தங்கமகன் திரைப்படமும், கமல் ஹாசனின் தூங்காதே தம்பி படமும் வெளியாகின. ஜெகன்னாதன் இயக்கிய தங்கமகன் படம் 100 நாட்களும், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய தூங்காதே தம்பி தூங்காதே படம் 175 நாட்களும் ஓடின. இந்தப் போட்டியில் கமல் வெற்றி பெற்றார்.
நல்லவனுக்கு நல்லவன்: 1983 தீபாவளிக்கு விட்டதை அடுத்த வருட தீபாவளிக்கு அதாவது 1984 பிடிக்க திட்டமிட்டு ரஜினி இறக்கிய படம் நல்லவனுக்கு நல்லவன். அந்தப் படத்துக்கு போட்டியாக கமல் நடித்த எனக்குள் ஒருவன் படம் ரிலீஸானது. நல்லவனுக்கு நல்லவன் 175 நாட்கள் ஓடியது எனக்குள் ஒருவன் திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. இந்தப் போட்டியில் ரஜினி வெற்றி பெற்றார். இந்த இரண்டு படங்களுக்குமே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்காதவன்: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் தீபாவளிக்கு ரஜினியின் படமும் கமலின் படமும் கோதாவில் குதித்தன. அதாவது 1985ஆம் ஆண்டு தீபாவளிக்கு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த படிக்காதவன் படமும், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் படமும் வெளியாகின. இவற்றில் படிக்காதவன் 235 நாட்களும், ஜப்பானில் கல்யாணராமன் 150 நாட்கள்வரையும் ஓடின. இந்தப் போட்டியிலும் ரஜினியே வெற்றிபெற்றார்.
ஹிட் கூட்டணி: அதனையடுத்து 1986ஆம் ஆண்டு தீபாவளிக்கும் படிக்காதவன் கூட்டணி மீண்டும் இணைந்து மாவீரன் படத்தை களமிறக்கியது. அந்தப் படத்துக்கு போட்டியாக கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த புன்னகை மன்னன் படம் வெளியானது. இவற்றி மாவீரனைவிடவும் புன்னகை மன்னன் படம் ஒரு படி மேலே இருந்ததால் மாவீரனைவிடவும் கொஞ்சம் கூட்டம் புன்னகை மன்னனுக்கு அதிகம் சென்றது. இரண்டு படங்களுமே 100 நாட்கள்வரை ஓடினாலும் வெற்றி என்னவோ கமல் பக்கம் சென்றது.
நாயகன் மெகா ஹிட்: தொடர்ந்து 1987ஆம் ஆண்டும் ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனும் தீபாவளி ரேஸில் நின்றனர். ஏவிஎம் தயாரிப்பு எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்ற பலத்தோடு ரஜினிகாந்த் மனிதன் படத்தை இறக்க; மணிரத்னம் என்ற படை தளபதியுடன் நாயகன் படத்தை இறக்கினார் கமல் ஹாசன். நாயகன் படத்தின் மேக்கிங், கமலின் நடிப்பு, இளையராஜாவின் இசை என அனைத்தும் ரசிகர்களை கட்டிப்போட படம் மெகா ஹிட்டடித்தது. இதனால் இந்த தீபாவளியிலும் கமல் வெற்றி பெற்றார். ரஜினி இரண்டாம் இடம் சென்றார்.

ஒரு வருட கேப்: தொடர்ச்சியாக ஐந்து தீபாவளிக்கு கோதாவில் குதித்த ரஜினியும் கமலும் ஒரு வருட கேப் விட்டு 1989ஆம் ஆண்டு தீபாவளிக்கு மீண்டும் களத்தில் குதித்தார்கள். அப்படி ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படமும் கமல் ஹாசனின் 100ஆவது படமான வெற்றிவிழாவும் ரிலீஸாகின. வெற்றிவிழா வித்தியாசமான முயற்சி என்று கொண்டாடப்பட்டாலும் மாப்பிள்ளை படமோ கமர்ஷியல் ரீதியாக அடித்து தூள் கிளப்பியது. இதனால் வெற்றிவிழாவைவிடவும் அதிக நாட்கள் ஓடியும் வசூல் செய்தும் வெற்றியை ரஜினிக்கு மூன்று தீபாவளிகள் கழித்து கொடுத்தது.
தளபதி: அதனையடுத்து 1991ஆம் ஆண்டு தீபாவளிக்கு கமலுக்கு நாயகன் கொடுத்த மணிரத்னத்துடன் இணைந்து தளபதி படத்தை ரஜினிகாந்த்தும், சந்தானபாரதி இயக்கத்தில் குணா படத்தை கமல் ஹாசனும் தீபாவளிக்கு களமிறக்கினார்கள். தளபதியில் ரஜினியின் ஸ்டைல், மணிரத்னத்தின் இயக்கம், மாஸ் ப்ளஸ் க்ளாஸ் காட்சிகள் என குணாவை ஓரங்கட்டி வசூல் வேட்டை நடத்தியது தளபதி. குணாவும் கமலின் நடிப்புக்காக கொண்டாடப்பட்டாலும் டாப்பில் இருந்தது என்னவோ தளபதிதான். அதனால் இந்த தீபாவளியிலும் ரஜினியே வெற்றி பெற்றார்.
தேவர் மகன்: அடுத்த வருட தீபாவளிக்கும் ரஜினியும் கமலும் போட்டிப்போட்டனர். இந்தமுறை கமல் ஹாசன் தேவர் மகன் என்ற படத்துடன் களமிறங்கினார். ரஜினிகாந்த் பாண்டியன் படத்துடன் களமிறங்கினார். தேவர் மகன் படம் தமிழ்நாடெங்கும் அதிரிபுதிரி ஹிட்டடித்து பாண்டியனை பவ்யமாக அமர செய்தது. இதனால் இந்த தீபாவளிக்கு கமல் ஹாசன் வெற்றி பெற்றார்.
முத்து: 1992 தீபாவளிக்கு பிறகு இரண்டு வருட தீபாவளிகளுக்கு ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனும் போட்டிப்போடவில்லை. அதனையடுத்து 1995ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த முத்து படமும் கமல் ஹாசன் நடித்த குருதிப்புனல் படமும் ரிலீஸாகின. இவற்றில் முத்து படத்தின் வெற்றி கடல் தாண்டி ஜப்பான்வரை சென்றது. ரஜினிகாந்த்தின் நடிப்பும் கே.எஸ்.ரவிக்குமாரின் ஜனரஞ்சகமான இயக்கமும் படத்தை தெறி ஹிட்டாக்கியது. குருதிப்புனல் கொண்டாடப்பட்டாலும் இரண்டாம் இடத்தையே பிடித்தது. எனவே அந்த தீபாவளியிலும் ரஜினியே வெற்றி பெற்றார்.
இப்படி தீபாவளிக்கு நேருக்கு நேராக இரண்டு பேரின் படங்களும் மோதியதில் ரஜினி அதிக முறை வெற்றி பெற்றிருப்பதாக கூறப்பட்டாலும் இரண்டு பேரும் கொடுத்த படங்கள் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனவே இரண்டு லெஜண்டுகள் என்பதை யாரும் மறக்க வேண்டாம்..


Click it and Unblock the Notifications











