ரஜினி ரூமிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த அரவிந்த் சாமி.. பெரிய மனுஷன் என நிரூபித்த ரஜினிகாந்த்!
சென்னை: தமிழ் சினிமாவின் கதாநாயகர்களில் சாக்லெட் பாய் கதாநாகர்களை வரிசைப்படுத்தினால் அதில் கட்டாயம் அரவிந்த் சாமி பெயர் இருக்கும். "ஹே ஓடக்கார மாரிமுத்து.. ஓட்டவாயி மாரிமுத்து.. ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க..சௌக்கியமா" பாடலுக்கு அரவிந்த் சாமி ஆடும்போது அந்த சினிமாவைப் பார்த்த இளம் பெண்களில் பலர் அரவிந்த் சாமி தன்னை நோக்கிதான் பாடுகின்றார் என நினைத்ததுண்டு. இப்படி பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்த அரவிந்த் சாமி, தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஸ்டார் நடிகராகவே மாறினார்.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த காலகட்டத்தில் அப்படியே தனது தந்தையின் தொழிலைக் கவனிக்க கடந்த 2006ஆம் ஆண்டு சென்ற அரவிந்த் சாமி அதன் பின்னர் 2013ஆம் ஆண்டுதான் சினிமா பக்கமே வந்தார். அதற்கும் காரணம் அரவிந்த் சாமியை அறிமுகப் படுத்திய மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தனி ஒருவன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் கார்த்தியும் நடிக்கின்றார்.

அரவிந்த் சாமி பிறந்த நாள்: நடிகர் அரவிந்த் சாமி இன்று அதாவது ஜூன் மாதம் 18ஆம் தேதி தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த் சாமி தான் அறிமுகமான தளபதி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற மிகவும் சுவாரஸ்யமான சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்போது கூறியிருந்தார். அது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.

தளபதி சூட்டிங்: அதில், "படப்பிடிப்பு நடைபெறும் போது நான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டேன். இதனால் படப்பிடிப்புத் தளத்தை சுற்றிப்பார்க்க திட்டமிட்டு, தளபதி படத்திற்காக போடப்பட்ட செட்டினை சுற்றிப்பார்த்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தேன். அறையில் நல்ல பெட் இருக்கவே, அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கலாம் என யோசித்து அங்கேயே படுத்து தூங்கிவிட்டேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி: கொஞ்ச நேரம் கழித்து எழுந்த போது, நான் படுத்திருந்த அறையின் தரையில் ஒருவர் படுத்திருந்ததைப் பார்த்தேன். அவர் வேறு யாரும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். நான் இவ்வளவு நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தது சூப்பர் ஸ்டாரின் அறை என எனக்கு அப்போதுதான் புரிந்தது. மேலும் நான் தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என்னை எழுப்பாமல் தரையில் படுத்து தூங்கினார்" என அரவிந்த் சாமி கூறினார்.

கதாநாயகன் அரவிந்த் சாமி: தளபதி படம் மணிரத்னம் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த படம். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். அரவிந்த் சாமிக்கு இந்த படம்தான் நடிகனாக முதல் படம். அதன் பின்னர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கதாநாகனாக அறிமுகமானார்.



Click it and Unblock the Notifications











