நான் ரொம்ப கொடுத்து வெச்சவன்.. சம்பந்தி பற்றி ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.. இவ்வளவு ஓபனா சொல்லிட்டாரே
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது. சூழல் இப்படி இருக்க தனது சம்பந்தி குறித்து அவர் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
கூலி படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. இப்போது கொச்சியில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதனை கமல்ஹாசன் தயாரிக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ரஜினிகாந்த் பேச்சு: அந்த நிகழ்ச்சியை வாழ்த்தி காணொளியில் பேசிய ரஜினி, "50 ஆண்டுகள் கழித்து நீங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களை பார்க்கும்போது உங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும். முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பாகியோர் இங்குதான் படித்திருக்கிறார்கள். எனது சம்பந்தி வணங்காமுடியும் இதே கல்லூரியில்தான் படித்திருக்கிறார். அவரை மாதிரி சாஃப்ட்டாக பேசும் ஒருவரை நான் பார்த்ததே இல்லை. அவர் ரொம்ப எளிமையானவர். அவர் சம்பந்தியாக கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் செய்தது: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு செய்திருக்கும் சர்வீஸ் சாதாரணமான ஒன்று இல்லை. தமிழ்நாடு காவல் துறை எப்போதும் அதை மறக்காது. அவரது ஃபிட்னெஸ் எனக்கு பிடிக்கும். ஹீரோக்கள்கூட அப்படி இருக்கமாட்டொம். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலர் பெரிய ஆட்களாக மாறியிருக்கிறார்கள். பெரிய இடங்களில் பணியாற்றிவருகிறார்கள். எனக்கு பல உறவினர்கள் இருந்தாலும்; நண்பர்களை பார்க்கும்போது புத்துணர்வு தானாகவே வந்துவிடும். அவர்களுடன் இருப்பதும் எப்போதும் மகிழ்ச்சிதான்.
சந்தித்துவிடுவேன்: நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எனது பழைய நண்பர்களை சந்திட்துவிடுவேன். சிவாஜி என்ற எனது பெயரை நானே மறந்துவிட்டேன். ஆனால் அவர்கள் சிவாஜி என எனது பெயரை சொல்லி அழைப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான். இந்த பல்கலைக்கழகம் பல உயர்ந்தவர்களை கொடுத்திருக்கிறது. நண்பர்கள்தான் முக்கியம். பழைய நண்பர்கள் கிடைப்பது ரொம்ப அபூர்வம்.
டேய் வாடா: என்னை மாமா, அப்பா, தாத்தா என எப்படி சொல்லி அழைத்தாலும் டேய் இங்க வாடா என்று நண்பர்கள் அழைக்கும்போது வரும் சந்தோஷம் இருக்கே. அது அசாத்தியமான சந்தோஷம். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி; குறிப்பிட்ட கால அளவில் பழைய நண்பர்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications