இரண்டாவது நாளே தர்மன் ஷூட்டிங் கேன்சல்.. பாக்யராஜுக்குத்தான் முதல் மரியாதை.. நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி, ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பாக்யராஜுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த், அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பாக்யராஜ் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியதோடு, அவருக்காக பல முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தனித்துவமான நட்பு நிலவி வந்தது.
நிறுத்தப்பட்ட 'தர்மன்' படப்பிடிப்பு: கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 26ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று பாக்யராஜ் மறைவு காரணமாக படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பை ஒத்திவைத்து, நேராக பாக்யராஜின் இல்லத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கமல்ஹாசனின் இரங்கல்: நடிகரும், 'தர்மன்' படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசனும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். "கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா" என்று அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே மாதத்தில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகிய இரு பெரும் படைப்பாளிகளையும் இழந்துள்ள தமிழ் சினிமா, மீள முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளது. இவர்களின் மறைவு தமிழ் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications