‘இளமை இனிமேல் போகாது முதுமை அவருக்கு வாராது’.. 50 ஆண்டுகள் ஓடும் குதிரை ரஜினி.. இன்னும் ஓடுவார்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் படு ஜோராக நடந்துவருகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் எதிர்பார்த்ததைவிட நன்றாக போகிறது என சொல்லப்படுகிறது. 74 வயதில் ஒரு ஹீரோவுக்கு இவ்வளவு மாஸா என்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஆச்சரியத்தில் ரஜினியை பார்த்துவருகிறார். திரைத்துறைக்கு வந்து இந்த ஆண்டோடு அவருக்கு 50ஆவது ஆண்டு. இந்தத் தருணத்தில் கூலிக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் ரஜினிக்கு மேற்கொண்டு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.
முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலில்; 'இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது' என வைரமுத்து எழுதியிருப்பார். அந்த வரியை அவர் எழுதியது கதைக்காக மட்டுமில்லாமல் ரஜினிக்காகவும் எழுதினார். அவர் எழுதியபடிதான் இன்றுவரை ரஜினி சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். 74 வயதில் ஒருவரால் எப்படி இப்படி முடியும் அனைவருமே ஆச்சரிய அலையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
யாரும் செய்யாதது: மத்திம வயது ஹீரோக்கள், இப்போதைய இளம் ஹீரோக்கள் எல்லாம் வருடத்துக்கு இரண்டு படங்கள் செய்வதையே குதிரை கொம்பாக பார்த்துவருகிறார்கள். ஆனால் ரஜினியோ இந்த வயதிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். கதைகள் கேட்டுவருகிறார். தன்னுடைய இள வயதில் அவர் வருடத்துக்கு பத்து படங்கள்வரை நடித்த வரலாறெல்லாம் உண்டு. எந்த வயதானாலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் எண்ணத்தை தனக்குள் வைத்து அதை காலம் முழுவதும் செயல்படுத்துவதெல்லம் ரஜினியை தவிர்த்து யாராலும் முடியாதது.

மிகச்சிறந்த நடிகன்: ரஜினிகாந்த் இப்போது பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர்தான். ஆனால் அவரது ஆரம்ப காலகட்டம் அப்படி இல்லை. அவரைப் போன்ற எதார்த்தமான நடிகரை பார்ப்பது அரிது. அவரால்தான் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை மாதிரியான படங்களையும் செய்ய முடியும், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், முத்து, படையப்பா மாதிரியான படங்களையும் செய்ய முடியும். எந்த ஜானராக இருந்தாலும் ரஜினியின் வேலை அதில் தன்னுடைய முழு உழைப்பையும், அர்ப்பணிப்பையும் போடுவதுதான்.
காமன் மேன்: ரஜினி இதுவரை ஏற்றிருந்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் காமன் மேன் கதாபாத்திரம்தான். எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் புனித பிம்பம் உருவாவதற்கு அந்தவகையன கேரக்டர்கள்தான் காரணம். அவருக்கு பிறகு அந்த ஃபார்முலாவை தொடர்ந்து செய்தும் அதில் வெற்றியும் பெற்றவர் என்றால் ரஜினிதான். அந்தவகையில் அவர் கறுப்பு எம்ஜிஆர்தான். அதேபோல் மற்றவர்களிடம் பழகும் விதம், விழாக்களில் பேசுவது, நடந்துகொள்ளும் முறை என அவரை அனைவரது மத்தியில் எளிதாக கனெக்ட் செய்தது.

50 ஆண்டுகள் ஓடும் குதிரை: இடையில் அவருக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டதுதான். பலரும் அவரது கரியர் அவ்வளவுதான் என கூறினார்கள். இதே நிலைமை பாபா சமயத்திலும் ஏற்பட்டது. ஆனால் அடுத்து நடித்த சந்திரமுகி படத்தில் எழுந்துவிட்டார். அதேபோல் அண்ணாத்த, தர்பாரில் விழுந்த பிறகு ஜெயிலரில் வீரியமாகவே எழுந்தார். ரஜினிகாந்த் விழுந்தால் உடனே எழுந்துவிடும் குதிரை மட்டுமில்லை; அது மீண்டும் எழுந்தால் ஓடிக்கொண்டிருக்கும் மற்ற குதிரைகளின் வேகம் எல்லாம் சரியும் நிலை ஏற்படும். அதைத்தான் ரஜினி தன்னுடைய ஒவ்வொரு கம்பேக்கிலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
இனி எத்தனையோ நடிகர்கள் வரலாம். வருபவர்கள் ரஜினியாக மாற வேண்டும் என்றுதான் நினைப்பார்களே ஒழிய; ரஜினியை முந்த வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். ஏனெனில் நம்பர் ஒன் என்ற இடத்தை ரஜினிகாந்த் தனது கட்டுப்பாட்டில் எடுத்து வருடங்களாகிவிட்டன. இப்போதைக்குகூட கூலி படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் வேறு எந்த ஹீரோவுக்கும் நடக்காத அளவுக்குத்தானே நடக்கிறது. இந்தத் தலைமுறையினரையும் ரஜினி கவர்ந்திருக்கிறார் என்றுதானே பொருள். அதுதான் உண்மையும்கூட. பல லாடங்கள் கட்ட பார்த்தாலும் இந்தக் குதிரை 50 ஆண்டுகள் மட்டுமில்லை தலைமுறைகள் கடந்தும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். வாழ்த்துகள் ரஜினி..


Click it and Unblock the Notifications











