நடிகர் ராஜேஷ் உயிரிழப்பு.. நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்.. ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகர்களில் முக்கியமானவர் ராஜேஷ். ஹீரோவாகவும் நடித்த அவர் கிட்டத்தட்ட் 150 படங்களவரை நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி எழுத்தாளர், ஜோதிடர் என பன்முக திறமைகளை கொண்ட அவர்; உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் ராஜேஷ். அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர் ஆவார்.மன்னார்குடியை சொந்த ஊராக கொண்ட அவர் சென்னையில் ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இதற்கிடையே அவருக்கு நடிப்பதிலும் ஆர்வம் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு அவள் ஒரு தொடர்கதை பட வாய்ப்பு கிடைத்தது.
ஹீரோவான நடிகர் ராஜேஷ்: அந்தப் படம் வெற்றியடைந்ததோடு மட்டுமின்றி நடிகராக அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்படத்துக்கு பிறகு கன்னி பருவத்திலே திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டடிக்க; அறிமுகப்படுத்திய பாலசந்தரே ராஜேஷை ஹீரோவாக வைத்து அச்சமில்லை அச்சமில்லை படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட்டானது.தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர்; கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மிளிர தொடங்கினார்.

பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்: அவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த பெரும்பாலான படங்கள் அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தன. அவரது கரியரில் பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த அந்த ஏழு நாட்கள் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தின் க்ளைமேக்ஸில் ராஜேஷின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து 80களில் பிஸியான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தார். இயல்பான நடிப்பு, பழகிய முகம், வாஞ்சையான பார்வை என அவரை பலரும் ரசித்தார்கள்.
நடிகர் மட்டுமில்லை: ராஜேஷை பொறுத்தவரை நடிகராக மட்டும் ஜொலிக்கவில்லை. எழுத்தாளராகவும் தனது திறமையை பதிவு செய்து வைத்திருக்கிறார். இதுவரை 5க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கும் அவர்; ஜோதிடராகவும் கலக்கியவர். மேலும் யூடியூபில் ஜோதிடம் குறித்து நிறைய பேசியிருக்கும் அவர்; முற்போக்கு சிந்தனையாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாக நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார் அவர்.
உயிரிழந்த ராஜேஷ்; சோகத்தில் திரையுலகம்: சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அவர். கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் நடித்திருந்த அவருக்கு உடல்நல குறைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 76ஆகும். ராஜேஷின் உயிரிழப்பு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் இரங்கல்: அவர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ரஜினி மட்டுமின்றி பல திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











