ரஜினி எம்.பியாகிறாரா?.. ஆளுநர் பதவியையே வேண்டாம்னு தூக்கி போட்டவரு.. அண்ணன் காட்டிய அதிரடி
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அபூர்வ் ராகங்களில் ஆரம்பித்த அவரது பயணம் ஜெயிலர் 2வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அவர்களுக்கு ஈடு கொடுத்து இன்றுவரை நடித்துவரும் ரஜினிகாந்த்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
ரஜினிகாந்த் தனது 74ஆவது வயதிலும் படு பிஸியாக நடித்துவருகிறார். கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக மகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன் ஒரு படம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி இப்போது பரபர்ப்பு, சர்ச்சைகளிலிருந்து விலகியிருக்கிறார். ஆனால் அவர் 90களில் எல்லாம் தனது மனதில் பட்டதை பேசி பரபரப்பில் சிக்கிக்கொள்வார்.
ரஜினி Vs ஜெயலலிதா: பாட்ஷா பட ரிலீஸ் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் மோதல் எழ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி முதல்முதலாக எழுந்தது. அதற்கேற்றபடி 1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் போயஸ் கார்டனிலும்கூட ஒருமுறை ரஜினிக்கும், ஜெவுக்கும் முட்டிக்கொண்டதாக தகவல்கள் இருக்கின்றன. அப்போதிருந்து ரஜினி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.

ரஜினியின் முடிவு: ஆண்டவனின் அருளும், நேரமும் வரும்போது அரசியலுக்கு வருவேன் என மேம்போக்காக சொல்லிவந்த ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டு ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போரை தொடங்கும் நேரம் வந்துவிட்டதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கூறினார். மேலும், தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அதிரடியாக அறிவித்தார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் சில காலம் கழித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.
ஏன் அந்த முடிவு?: ரஜினிகாந்த் தனடு உடல்நிலையை காரணம் காட்டிதான் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். அதற்கு ஒருதரப்பினர் ஆதரவை கொடுத்தாலும், இன்னொரு தரப்பினரோ, அரசியலுக்கு வந்தால் தன்னால் நிலைக்க முடியாது என்பது ரஜினிக்கு புரிந்திருக்கும். அதனால்தான் தெளிவாக முடிவெடுத்து பின்வாங்கிவிட்டார் என்று கருத்தை முன்வைத்தார்கள். ஒருவழியாக இதெல்லாம் ஓய்ந்த சூழலில்; அவ்வப்போது அரசியல் கட்சி மேடைகளில் தவிர்க்க முடியாத விழா வந்தால் அவ்வப்போது பேசிவருகிறார். அதுவும் பேசுபொருளாவது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் பேட்டி: இந்நிலையில் கமல்ஹாசன் எம்பியாகியிருப்பதால் ரஜினியும் எம்பியாக வாய்ப்புகள் இருப்பதாக திடீரென தகவல் பரவியது. இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினிகாந்த்துக்கு எம்.பி பதவியெல்லாம் வேண்டாம். அவருக்கு ஆளுநர் பதவியே வந்தது. அதனையே அவர் மறுத்துவிட்டார். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பமில்லை" என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











