ரஜினிக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளித்தார்கள்?.. இப்போது எப்படி இருக்கிறார்?.. இதோ முழு விவரம்
சென்னை: ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் நேற்றிரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்களும், பிரபலங்களும் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்துக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதென்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் ரிலீஸாகவிருக்கிறது. ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, அபிராமி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் ரஜினிக்கு மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

நாளை ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை அந்த டீசர் பூர்த்தி செய்யவில்லை. இதனால் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாகவிருக்கிறது. டீசரில் விட்டதை ட்ரெய்லரை பிடிக்க வேண்டும் என்று ட்ரெய்லர் கட்டை மிக அருமையாக இயக்குநர் செய்திருக்கிறார் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
இந்த வயதிலும் சுறுசுறுப்பு: ரஜினிக்கு இப்போது 73 வயது ஆகிறது. இந்த வயதில் பலருக்கும் நடப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அவரோ ஆடியோ வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்றுகொண்டு பேசினார். மேலும் வேட்டையன் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவும் செய்கிறார். இப்படி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினிகாந்த்தை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் பிரமிப்பில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதி: சூழல் இப்படி இருக்க நேற்றிரவு அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காகவும்; சில பரிசோதனைகளுக்காகவும் அவர் அட்மிட் செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. மேலும் ரஜினியின் உடல்நிலை சீராகத்தான் இருக்கிறது. யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மருத்துவமனை நிர்வாகமும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
என்ன நடந்தது?: இந்நிலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு மருத்துவமனையில் என்ன மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகின. அதன்படி அவரது அடிவயிற்றில் ரத்த நாளத்தில் சிறிய அளவிலான வீக்கம் ஏற்பட்டதாம். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒருமணி நேரம் நடந்த அந்த சிகிச்சை வீக்கம் வந்ததற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். மேலும் உணவு செரிமான பிரச்னை, சிறுநீரக பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும்; இப்போது அவர் தனியறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், செய்யப்பட்ட பரிசோதனைகள் குறித்து ஒரு அறிக்கையும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











