Chandramukhi 2 - சந்திரமுகி 2வில் ரஜினி நடிக்க வேண்டியது.. மிஸ் ஆக இதுவே காரணம்- மனம் திறந்த பி.வாசு
சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) சந்திரமுகி 2வில் ரஜினிகாந்த் தான் முதலில் நடித்திருக்க வேண்டியது என இயக்குநர் பி.வாசு தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய கிட்ஸுக்கு சந்திரமுகி எப்போதுமே ஃபேவரைட்.

சந்திரமுகி: ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா ரஜினியின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.
ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. படமானது செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பி.வாசு பேட்டி: இந்நிலையில் சந்திரமுகி 2வில் ரஜினிகாந்த் தான் நடித்திருக்க வேண்டியது என இயக்குநர் பி.வாசு தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சந்திரமுகியில் ரஜினிகாந்த் ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரத்தை டெவலப் செய்ய சொல்லி கடந்த 2006ஆம் ஆண்டே லதா ரஜினிகாந்த் என்னிடம் தெரிவித்திருந்தார். நானும் கதை எல்லாம் ரெடி பண்ணிவிட்டேன்.

ஆப்தமித்ரா: அதனையடுத்து முதலில் நீங்கள் ஆப்தமித்ரா பண்ணிவிடுங்கள். பிறகு தமிழில் செய்யலாம் என ரஜினி கூறினார். அதனையடுத்து கன்னடத்தில் ஆப்தரக்ஷகா எடுத்தேன். அது சூப்பர் ஹிட்டானது. பிறகு தமிழில் பண்ணலாம் என்று முடிவெடுத்தபோது ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
இதனால்தான் மிஸ்: அந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கு மேலே சென்றது. இதனால் எந்திரன் படம் எப்போது முடியும் என்று தெரியவில்லை என ரஜினிகாந்த்தும் சொல்லிவிட்டார். இந்தக் காரணத்தால்தான் சந்திரமுகி 2 படம் தொடங்கப்படவில்லை. இல்லையென்றால் அப்போதே இந்தப் படம் ரஜினி நடிக்ப்பில் வெளியாயிருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











