ரஜினி, ஷாருக்கான், சிரஞ்சீவி... பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூப்பர் ஸ்டார்ஸ்... யாரு கிங்-ன்னு பார்க்கலாம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது.
அதன்படி, இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷாருக்கானின் ஜவான் படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் எனக் கூறப்படும் நிலையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கவுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூப்பர் ஸ்டார்ஸ் : 2023 ஆரம்பம் முதலே டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. அடுத்து ஜனவரி இறுதியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து தமிழில் வாத்தி, பத்து தல, விடுதலை, பொன்னியின் செல்வன் 2 என வரிசைக் கட்டி படங்கள் வெளியாகின.
இதனையடுத்து ஜூன் மாதம் மாமன்னன் உள்ளிட்ட மேலும் சில படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஜெயிலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மாவீரன் ரிலீஸ் தேதி மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் ரஜினிக்குப் போட்டியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் களமிறங்கவுள்ளாராம். பதானை தொடர்ந்து ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான்.

அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையே தொடங்காமல் இழுத்தடித்து வருகிறாராம் அட்லீ. இதனால் ஜவான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என சொல்லப்பட்டது. அதன்படி, இந்தப் படம் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கான் ஜவான் இரண்டுமே பான் இந்தியா படங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான் ஜவான் ரிலீஸாகிறது. இருந்தாலும் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள போலோ சங்கர் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. சிரஞ்சீவியுடன் தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள போலோ சங்கர், அஜித் நடிப்பில் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது.
ரஜினியின் ஜெயிலர், சிரஞ்சீவியின் போலோ சங்கர், ஷாருக்கானின் ஜவான் என மூன்று சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ஒரே மாதம் வெளியாகவுள்ளது, பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் நல்ல வசூல் கிடைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











