Lalith Kumar: தலைவர்171 பட அறிவிப்பிற்கு காரணமான லியோ பட தயாரிப்பாளர்?
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணத்தில் நடந்து முடிந்துள்ளது தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் 19ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ பட பிரமோஷனுக்காக அறிவிக்கப்பட்டதா தலைவர் 171 படம்?: நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரி மாதத்தில் ரிலீசானது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப்படம் அஜித்தின் துணிவு படத்துடன் மோதியது. இரு படங்களுமே ரசிகர்களின் ஆதரவை சிறப்பாக பெற்று, ஏறக்குறைய ஒரே மாதிரியான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டே விஜய்யின் அடுத்தப்படமான லியோ, வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
லியோ படத்தின் டைட்டில் டீசர் மிகப்பெரிய மாஸாக அமைந்தது. தொடர்ந்து அவரது பிறந்தநாளையொட்டி வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் அதிகரித்தது. தொடர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாட்களையொட்டி வெளியான கிளிம்ப்ஸ் வீடியோகளும் பட்டையை கிளப்பின. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்துள்ளார். பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பிப்ரவரியில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங், கடுமையான குளிர் மற்றும் நிலநடுக்கத்திற்கிடையில் 52 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. தொடர்ந்து சென்னை, தலக்கோணம் ஆகிய இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடத்தப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 5ம் தேதி துபாயில் படத்தின் இசை வெளியீடு நடத்தப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில்தான் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாகவும் ஆனால் இடம் இன்னும் முடிவாகவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படமான தலைவர் 171 குறித்து இன்றைய தினம் சன் பிக்சர்ஸ் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லோகேஷும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்னும் ஒரு மாதத்தில் லியோ படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் அதிகரிக்கும்வகையில், லோகேஷின் அடுத்தப்படம் ரஜினியுடன் என்ற அறிவிப்பை உடனடியாக மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கேட்டுக் கொண்டதாகவும் அதை தொடர்ந்தே திடீரென இன்றைய தினம் தலைவர்171 படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அவசர அவசரமாக மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டின்போது காகம் -பருந்து கதையை சொல்லி விஜய்யை வம்பிழுத்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் விஜய்யின் படத்தின் ப்ரமோஷனுக்காக தன்னுடன் லோகேஷ் இணையும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பை வெளியிட அனுமதி அளித்திருப்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. லியோ படத்திற்கு ஏற்கனவே மிக அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சமீபத்தில் 6 வாரங்களுக்கு முன்னதாகவே லண்டனில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் 24 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. அதனால் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக லோகேஷின் அடுத்தப்பட அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











