பெரும் மகிழ்ச்சி.. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினிகாந்த்!
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து பெரும் மகிழ்ச்சி என ட்வீட் போட்டுள்ளார்.
இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

45 ஆண்டுகள்
தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகள் மன்னனாக, தளபதியாக, அண்ணாமலையாக, அருணாச்சலமாக, முத்துவாக, பாட்ஷாவாக, படையப்பாவாக, எந்திரனாக, அண்ணாத்தயாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு 67வது தேசிய விருது விழா நிகழ்ச்சியில் தாதா சாகேப் பால்கே விருது துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கரங்களால் வழங்கப்பட்டது.

ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ரஜினிகாந்துக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்காதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் ராம் கோபால் வர்மா அதனை சீண்டும் வகையில் போட்ட 'கொரியர் மேன்' ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியது.

குடியரசுத் தலைவரை சந்தித்து
இந்நிலையில், விருது பெற்ற கையோடு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை அவரது மாளிகையில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் வாழ்த்துக்களை பெற்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வாழ்த்திய மோடி
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை தொடர்ந்து பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மனைவி லதா ரஜினிகாந்தும் இந்த சந்திப்பில் உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் மகிழ்ச்சி
"மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என நடிகர் ரஜினிகாந்த் மூன்று முக்கிய புகைப்படங்களை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் இந்தியளவில் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து கூறியிருந்தனர்.


Click it and Unblock the Notifications











