அஜித்தா? ரஜினிகாந்தா? சிவகார்த்திகேயனா? பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு சம்பவம் பண்ணப்போவது யாரு?
சென்னை: தளபதி விஜய்யின் அரசியல் படம் நாளுக்கு நாள் டிரெண்டாகி வரும் நிலையில், இந்த ஆண்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படம் வெளியாகுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைந்த நிலையில், தனக்கான தனி யூனிவர்ஸையே குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித் குமார் உருவாக்கியுள்ளார்.
அஜித் கேங்ஸ்டராக நடித்த தீனா, பில்லா மற்றும் நெகட்டிவ் ரோலில் நடித்த மங்காத்தா என அனைத்து படங்களையும் கலந்துக் கட்டி அட்டகாசமான ஒரு ஏகே யூனிவர்ஸ் படமாக குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10ம் தேதி தியேட்டர்களை தெறிக்கவிடக் காத்திருக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கப் போவது யாரு என்கிற பஞ்சாயத்தும் சோஷியல் மீடியாவில் பற்றிக் கொள்ள அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே மோதல் கிளம்ப ஆரம்பித்துள்ளது.

குட் பேட் அக்லி வசூல் எப்படி இருக்கும்?: அஜித் குமாரின் கடைசி படமான விடாமுயற்சி திரைப்படம் இதுவரை உலகளவில் 150 கோடி வசூலை கூட தொடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் திங்கட்கிழமை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்த படம் வெளியாகிறது. ஆனால், நேற்று வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசர் ஒட்டுமொத்த அஜித் ஆர்மியையும் எழுப்பி விட்டிருக்கிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு குட் பேட் அக்லி படத்தின் வசூல் வேட்டை இருக்கும் என்றும் இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படமே குட் பேட் அக்லி தான் என அஜித் ரசிகர்கள் சவால் விட ஆரம்பித்து விட்டனர். அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் வசூலை குட் பேட் அக்லி அசால்ட்டாக வசூல் செய்யும் என்கின்றனர். 500 கோடி வசூல் எல்லாம் கடந்தால் ஆல் டைம் ஹிட் தான் என்கின்றனர்.

ரஜினிகாந்தின் கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர், பூஜா ஹெக்டே என ஒரு பெரிய படையுடன் அனிருத் இசையில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படம் தான் இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்றும் சந்தீப் கிஷனே அந்த படம் 1000 கோடி அடிக்கும்னு சொல்லிவிட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் வெயிட்டு காட்டி வருகின்றனர். வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில் எல்லாம் இருந்தும் படம் பெரிதாக வெற்றியடையவே இல்லையே என்கிற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் சாதிப்பாரா?: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படம் தான் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் பராசக்தி அடுத்த ஆண்டு தான் வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அடுத்தடுத்து அந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டே வெளியானால் அமரன் படத்திற்கு பிறகு இன்னமும் வசூல் அதிகரிக்கும் என்றும் இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் கொடுத்து புதிய சாதனையை படைப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. உலக அளவு வசூலுக்கு இணையாக தமிழ்நாட்டில் பெறப்படும் ஷேர் ரொம்பவே முக்கியம் வாய்ந்தது என்கின்றனர்.

இன்னமும் இருக்கு: கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் குபேரா மற்றும் இட்லி கடை போன்ற படங்களும் இந்த ஆண்டு பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பில்டப்புக்கு ஏற்றவாறு படங்கள் சிறப்பாக இருந்தாலே போதும் வசூல் தானாக வரும் என்றும் இந்தியன் 2, விடாமுயற்சி போல ஆகிவிட்டால் தான் கஷ்டம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











