மீண்டும் இமயமலை செல்லும் ரஜினிகாந்த்?.. கூலி படத்துக்கு முன்னாடி போட்ட பக்காவான ஸ்கெட்ச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அபுதாபிக்கு சென்று திரும்பிய நிலையில், இமயமலைக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு இமயமலை பயணத்தை அப்படியே தவிர்த்து விட்டார். இந்நிலையில் மீண்டும் உலகம் இயல்பான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கெல்லாம் பயணம் சென்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.
ஆன்மீகத்தில் ஆர்வம்: ரஜினிகாந்த் நடித்த நூறாவது படம் ராகவேந்திரா. சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த் ராகவேந்திரா மீது பற்றுக் கொண்ட நிலையில் தனது மண்டபத்துக்கு ராகவேந்திரா மண்டபம் என பெயர் சூட்டினார். அதன் பின்னர் இமயமலைக்கு செல்ல ஆரம்பித்த நிலையில், பாபாஜியை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.
பாபா: பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால், அந்தப் படத்தில் தனது குருவாகிய பாபாஜியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்தார் ரஜினிகாந்த். இமயமலைக்கு அடிக்கடி அவர் சென்று வர காரணமும் அதுதான் எனக்கு கூறுகின்றனர்.
மீண்டும் இமயமலை: கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இமயமலைக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் விரைவில் இமயமலைக்கு பயணம் செல்லப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
வேட்டையன்: இந்த ஆண்டு முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் கூட வெளியாக முடியாத அளவுக்கு படு சொதப்பலான படமாக அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தது எல்லாம் வீணாகப் போய்விட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள வேட்டையின் திரைப்படம் ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெயிலர் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் மல்டி ஸ்டார் உள்ளதால் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்: வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். 73 வயதிலும் அதிரடியாக ஆக்சன் செய்து நடித்து வரும் ரஜினிகாந்த் அந்த படம் தொடங்குவதற்கு முன்னதாக இமயமலைக்கு சென்று விட்டு வரும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் ஃப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து விட்டதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிலும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தற்போது அபுதாபிக்கு சென்ற நிலையில், அங்கே உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் ரஜினிகாந்த் சென்று வந்த போட்டோக்கள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











