பண்ணைபுரம் டூ லண்டன்.. சாமி உங்களால் இந்தியாவுக்கு பெருமை.. இளையராஜாவை பாராட்டிய ரஜினி
சென்னை: இசைஞானி இளையராஜா இசையில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. படமும், இசையும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதேபோல் அந்தப் படத்துக்கு அடுத்ததாக தினசரி என்ற படத்துக்கு இசையமைத்தார். இந்தச் சூழலில் தற்போது வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதனை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றவிருக்கிறார். அதனையொட்டி ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இளையராஜா முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.
ராஜா சந்தித்த பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சர்ச்சைகளும் சுற்றியிருக்கின்றன: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டு செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பயோபிக்: அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம், தினசரி ஆகிய படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களில் விடுதலை 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். அடுத்ததாகவும் இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பொனி: இதற்கிடையே இளையராஜா வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிம்பொனி அரங்கேற்ற இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் பாராட்டு: இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி அரங்கேறவிருப்பதால் இளையராஜாவுக்கு பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தினையும் கூறிவருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இளையராஜாவை வாழ்த்தினார்கள்.அதற்கு ராஜாவும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், "பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைகிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை. பாராட்டுகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக இளையராஜாவை ரஜினிகாந்த் எப்போதும் சாமி என்றுதான் அழைப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











