மாமனிதனை பாராட்டிய மாணிக் பாட்ஷா.. மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு.. அவர் மிஸ் பண்ணதே இல்லை!
சென்னை: நல்ல திரைப்படங்கள் வந்தால் உடனடியாக ரஜினிகாந்த் பாராட்டுவார் என ஷங்கர் பாராட்டிய செய்தியிலேயே குறிப்பிட்டு இருந்தோம். இந்நிலையில், மாமனிதன் படத்தை பார்த்து விட்டு போன் செய்து படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெள்ளிக்கிழமை மாமனிதன் திரைப்படம் பல படங்களுடன் போட்டியாக வெளியானது.
இந்த வாரம் வெளியான படங்களிலேயே மக்கள் வரவேற்பை மட்டுமின்றி பிரபலங்களின் வரவேற்பையும் அதிகமாக பிடித்திருக்கிறது மாமனிதன்.

பெரிய வசூல் இல்லை
ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், விஜய்சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் முதல் நாளில் வெறும் 60 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என விஜய்சேதுபதி நடிப்ப்பில் சமீபத்தில் வெளியான இரு படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உள்ள மாமனிதன் குறைவான தியேட்டர்களில் வெளியான நிலையில், பெரிய வசூலை முதல் நாளில் வசூல் செய்யவில்லை.

போட்டியில் விக்ரம்
கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் 25 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், இன்னமும் அதிகப்படியான தியேட்டர்களை ஆக்கிரமித்து 400 கோடி வசூலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் மற்றும் இந்த வாரம் மாமனிதன் படத்துடன் போட்டியாக வேழம், பட்டாம்பூச்சி, மாயோன் என பல படங்கள் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், அனைத்து படங்களுக்கும் போதுமான வசூல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விமர்சனம்
இந்த வாரம் வெளியான படங்களிலேயே விமர்சகர்கள் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவு பெற்று அதிக வரவேற்பை மாமனிதன் படம் பெற்றிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை மாமனிதன் கொடுத்தது என ட்வீட் போட்டிருந்தார். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.

ரஜினிகாந்த் பாராட்டு
இந்நிலையில், மாமனிதன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படம் அற்புதமாக இருக்கிறது என இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதிக்கு போன் செய்து பாராட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை படத்தின் விநியோகஸ்தரான நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். நல்ல படங்களை பாராட்ட என்றுமே ரஜினிகாந்த் தவறியதில்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











