ஏவிஎம் தயாரிக்கும் அந்த நாள் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்த ரஜினிகாந்த்
சென்னை: அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் அந்த நாள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். இப்படத்தை தயாரிக்கவிருப்பது ஏ.வி.எம் நிறுவனம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த நாள் திரைப்படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ் பெறவும், அந்த நாள் திரைப்படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடந்த 1954ஆம் ஆண்டு, வீணை பாலச்சந்தர் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் அந்த நாள். திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த இப்படத்திற்கு நடிகரும், கதாசிரியருமான ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய அம்சம், பாடல்களே இல்லாமல் வெளியான படமாகும். அந்த காலத்தில் சாதாரணமாக ஒரு படத்தில் குறைந்தபட்சமாக 10 அல்லது 15 பாட்டுகள் இடம்பெற்று வந்த நிலையில், முதன் முதலாக பாடல்களே இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தயாரித்தது ஏ.வி.எம் நிறுவனமாகும்.
தற்போது 65 ஆண்டுகள் கழித்து மீண்டும், அந்த நாள் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் ஏ.வி.எம் நிறுவனம் தான். ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் கிரீன் மேஜிக் என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆர்.ரகுநந்தன் தயாரிக்கும் திரைப்படம் அந்த நாள். அறிமுக இயக்குநர் விவீ எழுதி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 30ஆம் தேதியான நேற்று மாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தால் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த நாள் திரைப்படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ் பெறவும், அந்த நாள் திரைப்படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸின் எம்.சரவணன், இயக்குநர் SP.முத்துராமன், படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம், அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணியை ஜே.எஃப்.காஸ்ட்ரோ மேற்கொள்கிறார். இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றுள்ளார் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











