ரஜினியை பீஸ்டுக்கு எதிராக பயன்படுத்தும் நெட்டிசன்கள்.. மவுனம் கலைப்பாரா?
சென்னை: ஏப்ரல் 13ம் தேதி மாலை நடிகர் ரஜினிகாந்த் பீஸ்ட் படம் பார்த்ததாக தகவல்கள் வெளியாகின.
அதே போல, ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 படத்தையும் ரஜினிகாந்த் பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், கேஜிஎஃப் 2 தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூருக்கு போன் செய்து ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் பீஸ்ட் படம் பற்றி எதுவுமே பேசவில்லை என்றும் வெளியாகி உள்ள தகவல்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

முதல் வாழ்த்து
இந்திய சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் முதலில் அந்த படத்தை பார்த்து வாழ்த்தும் மனம் கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது நாடறிந்த ஒன்று. இந்த ஆண்டு தமிழில் வெளியான மகான் மற்றும் டாணாக்காரன் உள்ளிட்ட படங்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அது தொடர்பாக அந்த படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

பீஸ்ட் பார்த்த ரஜினிகாந்த்
ஏப்ரல் 13ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எந்தவொரு பாராட்டையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளன.

கேஜிஎஃப் 2வுக்கு பாராட்டு
அதே சமயம் ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 படத்தையும் நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தை பார்த்து பிரமித்துப் போன ரஜினிகாந்த் Hombale தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் விஜய் கிரகந்தூருக்கு போன் மூலம் அழைத்து படம் ரொம்ப சூப்பரா இருக்கு என பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள நிலையில், இவர்கள் கூட்டணியில் உருவான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாமல் மெளனம் காப்பது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

நிஜமா பார்த்தாரா
நடிகர் ரஜினிகாந்த் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை பார்த்ததாக சில டிராக்கர்கள் மட்டுமே தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கேஜிஎஃப் 2 தயாரிப்பு நிறுவனமும் அதுபற்றி எதுவும் இதுவரை குறிப்பிடவில்லை. இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் இந்த இரு படங்களையும் நிஜமா பார்த்தாரா? என்கிற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











