ஒரு பயலும் என்னை மதிக்கல.. சினிமாவை விட அதுதான் பவர்னு புரிஞ்சுக்கிட்டேன்.. மேடையில் பேசிய ரஜினிகாந்த்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையான மனிதர் என்று பிரபலங்கள் பலரும் கூற கேட்டிருப்போம். இப்போதும் கெரியரின் உச்சத்தில் தான் இருக்கிறார். ஆனால் அவரது இளமைக் காலத்தில் கெரியரின் உச்சத்தில் இருந்த போது, தற்போது உள்ள எளிமையும். பொறுமையும் அவரிடத்தில் இருந்தது இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கையில் தற்போது அந்த எளிமையும் பொறுமையும் இருக்க முக்கிய காரணமாக பலரும் கூறுவது, ' அட.. வயசாகிடுச்சுப்பா.. எப்போதும் 16ஆகவே இருக்க முடியுமா?' என்பதுதான். ஆனால் உண்மைக் காரணம், அவரது ஆன்மீகம் தான்.
தான் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போதே, ஆன்மீக அரசியல் என்று கூறியிருந்தார். காரணம் அவர் நம்புகிற, பின்பற்றுகிற ஆன்மிகம் அவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போட்டது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டையும் மாற்றும் என்று அவர் நம்பியதால் அப்படி சொல்லியிருக்க கூடும்.

இப்படி இருக்கையில் அண்மையில் கலந்து கொண்ட குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசுகையில் பல சுவாரஸ்யமான தகவல்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் பேசுகையில், " நான் முதன் முதலாக இவரது ஆசிரமத்திற்கு வரும் போது இரண்டு நாட்கள் மட்டுமே தங்கவேண்டும் என்று வந்தேன். ஆனால் நான் அங்கு 15 நாட்கள் இருந்தேன். காரணம் அந்த ஆசிரமத்தின் அமைப்பு முறை அப்படி. அங்கு மிகப்பெரிய ஏரி இருந்தது. குதிரைகள் இருந்தது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி.
மன நிம்மதி: நூற்றுக்கணக்கான மாடுகள் இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாகவும் மன அமைதிக்கு ஏற்ற வகையிலும் இருந்தது. இப்படி இருக்கும்போது, ஒரு நாள் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னைக் கூப்பிட்டு, நாளை நான் பக்தர்களைச் சந்திக்கிறேன், நீங்களும் உடன் வாருங்களேன் என்று கூறினார். நான் முதலில் வேண்டாம் என்று நினைத்தேன். காரணம் என்னைப் பார்த்தால் பக்தர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள், ஆட்டோகிராப் கேட்பார்கள் என்பதால் வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் குருதேவ் என்னை கட்டாயம் வர வேண்டும் என்றும் கூறிவிட்டார்.

ஒருவர் கூட மதிக்கவில்லை: இதனால் நான் ஆட்டோகிராப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்றேன். அங்கு போய் பார்த்தால், ஒருவரும் என்னைப் பார்க்க கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால் பார்த்தவர்களும் என்னிடத்தில் வந்து எதுவும் கேட்கவும் இல்லை. அப்போதுதான் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை விட, ஆன்மிகம் கொடுக்கும் சக்தி தான் பெரியது என்று நான் அன்று புரிந்து கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார். ரஜினி இவ்வாறு கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications