Rajinikanth: கோழையாக மட்டும் சாக மாட்டேன்.. சூப்பர் ஸ்டாரின் ஃபயர் பேச்சு.. விஜய் ரசிகர்களே இதை கவனிங்க!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் சரி, மக்களவைத் தேர்தல் நடந்தாலும் சரி, எப்படியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசு பொருளாக மாறிவிடுகிறார். அவரது ஆதரவு யாருக்கு? அவர் எந்த கட்சிக்கு இணக்கமாக இருக்கிறார் என்ற பல கோணங்களில் விவாதங்கள் எப்படியேனும் உருவாகி விடுகிறது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்தது, ஆனால் விஜய்க்கு மனவலிமை உள்ளது, அதனால் தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று விமர்சித்தார்.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கியது. பலரும் ஆதவ் அர்ஜுனாவை காட்டமாக விமர்சித்தது மட்டுமல்லாமல் விஜய்யையும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர்களுடன் நேருக்கு நேர் தவறைச் சுட்டிக் காட்டக்கூடியவர், விஜய் போல கை கட்டி தனது பட ரிலீசுக்காக சிம்பதி வீடியோ போடுபவர் அல்ல என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

1996ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் செல்வி ஜெயலலிதா முதலமைச்சரானால் தமிழ்நாட்டை ஆண்டவனாலே காப்பாற்ற முடியாது என்று பத்திரிகையாளர்கள் முன் பகிரங்கமாக கூறியவர். மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சிவாஜிக்கு முறையான மரியாதையை ஒரு முதலமைச்சராக நீங்கள் செய்யவில்லை என்று சொடக்கு போட்டு மேடையில் பேசியவர் ரஜினிகாந்த் என்றும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
காட்டமான பதிலடி: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் ஏதோ சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பது மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள், மதுரையில் விஜய்யை ஆதவ் அர்ஜுனாவையும் காட்டமாக விமர்சித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.

கோழையாக சாகமாட்டேன்: இப்படி இருக்கையில் ரஜினியின் பழைய பேச்சு தொடர்பான வீடியோவை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதில், "செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் " என்று அவர் கூறும் வீடியோவைப் பகிர்ந்தும் வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை ஆளுமையாக இருந்தாலும் அரசியல் தளத்தில் அவரது உள்ளீடு என்பதும் தாக்கம் என்பதும் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் இம்முறை யாருக்கு ஆதரவாக களமாட போகிறார்கள் என்பதில் ஊர்ஜிதமான தகவல்கள் இல்லை என்றாலும் ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு எதிராக கட்டாயம் களமாட போகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. இந்த அசாதாரண சூழலை விஜய் மற்றும் அவரது கட்சியினர் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதற்கு தேர்தல் களம் பதில் அளிக்குமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











