twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது.. ரஜினி பேசியதுதான்!

    By Shankar
    |

    Recommended Video

    சிஸ்டத்தை மாத்தணும்-ரஜினி

    சென்னை: 90களில் இருந்தே ரஜினியை சுற்றிக் கொண்டிருக்கிறது அரசியல். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவர் அதிகாரத்தில் இருக்கும்போதே துணிச்சலாக எதிர்த்தவர் ரஜினி. கடந்த ரசிகர் சந்திப்பின் போது ரஜினி 'சிஸ்டம் சரியில்லை' என்று சொன்னது இன்னமும் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது ரஜினியின் பாட்ஷா காலத்து பேட்டி ஒன்றை இங்கே தருகிறோம்.

    பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்... எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.

    Rajinikanth's Interview in 90's

    அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் இந்தப் பேட்டி வெளிவந்தது.

    கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்...

    இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகள் மட்டும்:

    சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா?

    ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்... (சுஜாதா: 'அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!')

    சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?

    ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல்? பணம் - புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்... இதுக்காகத்தானே? ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்...?

    சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?

    ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா... அதுமாதிரி... எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. சிஸ்டம் மொத்தமா மாறினாத்தான் உண்டு.

    சுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது...

    ரஜினி: ஆமாம்... எம்ஜிஆரையே எடுத்துக்கங்க... வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே...

    சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?

    Rajinikanth's Interview in 90's

    ரஜினி: யெஸ்... என்னன்னா... கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். 'அவரை விட இவர் பெட்டர்'னு (சிரிக்கிறார்)... ஆனா அது பிரயோஜனம் இல்லையே...ஸிஸ்டம் மாறணும்.

    சுஜாதா: நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலேன்னு ஒரு ரசிகர் தற்கொலை செஞ்சிகிட்டதாக் கூட படிச்சேன். ஆனா அந்த இல்யூஷன் உங்ககிட்ட இல்லேங்கிறது தெரியும். 'உலகமே நம்மை விரும்புது'ங்கற இல்யூஷன் இல்லை. ஆனா ரசிகர்கள் உங்களை நெருக்கமா உணர்றாங்க. Larger than life image... ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒரு பெரிய Motivatibe Force உங்களோடது இல்லையா...? 'அவங்கள்ல ஒருத்தர் நீங்க'ன்ற இமேஜ் இருக்கே, அதை பாஸிடிவ்வா மாத்தலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?

    ரஜினி: நிறைய பண்றாங்க... நற்பணி பண்றாங்க. சமூக சேவை பண்றாங்க. கண்தானம், முதியோர் உதவி, ரத்த தானம், வெள்ள நிவாரணம் மாதிரி பலதும் பண்றாங்க.

    சுஜாதா: நீங்க சொல்றதை அப்படியே கேக்குறாங்களா?

    ரஜினி: நிச்சயமா... அவங்க எல்லாருக்குமே, நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேங்குறேன்னு ஒரு ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்குறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்துலேர்ந்து நான் சொல்லிக்கிட்டே வந்திருக்கேன், எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமில்ல... நான் எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்ப யாருமே சொல்ல முடியாது (சிரிக்கிறார்). It is Unpredictable.

    சுஜாதா: ரசிகர் மன்றங்களுக்குன்னு ஏதாவது கைட்லைன் கொடுத்திருக்கீங்களா?

    ரஜினி: ஆமாம்... முதல்ல வீடு, அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தைகள்... இவற்றைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறம் ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்.

    சுஜாதா: ஸ்டாருக்கும் நடிகருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்டார் நடிகரால சில வித்தியாசமான ரோல்களைப் பண்ண முடியாது. ஷாரூக்கான் மாதிரி நெகடிவ் ரோல்களைப் பண்ண முடியாது. கமல்கிட்ட அந்தத் திறமை இருக்கு. பாதி நடிகர், பாதி ஸ்டார் மாதிரி. அல்பசே்சினோ, ராபர்ட் டி நீரோ, டஸ்டின் ஹாஃப்மேன் மாதிரி ஸ்டார்களெல்லாம் ரொம்ப வித்தியாசமா கட்டுப்பாடுகள் இல்லாம நடிக்கிறாங்க. பெண் வேஷம் கூடப் பண்றாங்க. உங்களால அப்படி வித்தியாசமா பண்ண முடியாதா... அல்லது தயாரிப்பாளர்கள் விடமாட்டேங்கறாங்களா?

    ரஜினி: இல்லை... நானே அந்த மாதிரி செய்ய விரும்பறதில்ல. ஏன்னா, இதுல பெரிய அளவுல பணம் இன்வால்வ் ஆகியிருக்கு. அதில நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. என் படம் பெயிலியரானா அதோட பாதிப்பு ரொம்பப் பேருக்கு இருக்கும். என் இமேஜுக்குத் தகுந்த படம் பண்றதுதான் எல்லோருக்கும் நல்லது.

    சுஜாதா: உங்க பேர்தான் Selling point... இல்லையா?

    ரஜினி: யெஸ்... யெஸ்...

    சுஜாதா: மணிரத்னம், பாரதிராஜா போன்ற டைரக்டர்ஸ் எல்லாம் உங்களை வெச்சு ஒரு பெரிய சக்ஸஸ் கொடுக்க முடியலையே... ஏன்? உங்க சூப்பர் ஸ்டார் இமேஜை அவங்க சரியா புரிஞ்சுக்கலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? அது பரிசோதனை முயற்சியா?

    ரஜினி: ரஜினிகாந்த் படம்னா ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. கிம்மிக்ஸ் மாதிரின்னு வெச்சுக்கங்க. இன்டலிஜென்ட் டைரக்டர்ஸ் அவங்களோட தனித்துவம் இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதான் குழப்பம். ஆனா தளபதி, It really did well... but not as expected!

    ஆமா... ரஜினி படமா, மணிரத்னம் படமான்னு ரசிகர்கள் குழம்பிட்டாங்க. ரசிகர்கள் விரும்பறதைக் கொடுக்கிறதுதான் நல்லது. அடுத்தவங்க பணத்தை வச்சிக்கிட்டு நான் எக்ஸ்பரிமெண்ட் பண்ண முடியாதில்லையா? That is why I don't want to take risk.

    Rajinikanth's Interview in 90's

    சுஜாதா: பொதுவா சராசரி வாழ்க்கையில டென்ஷன் இருக்கு. உங்களுக்கு படம் ரிலீஸாகும்போது டென்ஷன் ஏற்படுமா?

    ரஜினி: இருக்கும். ஒரு வாரம் வரை இருக்கும். ரெண்டாவது வாரத்துல படம் எப்படின்னு தெரிஞ்சிடும். முதல்வாரத்துல வர்ற விமர்சனங்கள் தெளிவா இல்லாம குழப்பும். அப்புறம் சுலபமா தெரிஞ்சிடும். யாருக்கும் போன் பண்ணிக்கூடக் கேட்க மாட்டேன்.

    English summary
    Here is an old Interview of Rajinikanth to legendary writer Sujatha on politics, cinema and current system of the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X