எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் வேறுபாடுதான்.. அவங்களை நம்பக்கூடாது.. போட்டுடைத்த ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் இன்னும் 11 நாட்களில் வெளியாகவிருக்கிறது. நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள். விழாவில் ரஜினிகாந்த் மிக அருமையாக பேசினார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துவருகிறார்கள். முக்கியமாக சத்யராஜ் பற்றி பேசியதையும் அவர்கள் அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில்; படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் என பலர் நடித்திருக்கிறார்கள். இதனாலும் படத்துக்கு ஹைப் எகிறியிருக்கிறது.
ரஜினி vs சத்யராஜ்: இப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது சத்யராஜ் இதில் நடிக்கிறார் என முடிவு செய்யப்பட்டது. அப்போதைக்கு அந்தத் தகவல் பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்திருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

சிவாஜிக்கு நோ: அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரம் முதலில் சத்யராஜுக்குத்தான் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்க்ளால் அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. மேலும், ரஜினியை சத்யராஜுக்கு பிடிக்காததால்தான் அப்படத்தில் அவர் நடிக்கவில்லையென்றும்; இந்தப் படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன். நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா என அவர் கேள்வி கேட்டதாகவும் தகவல்கள் உண்டு.
கருத்தியல் முரண்பாடு: தொழில்ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட ரீதியாகவும் இரண்டு பேருக்குமிடையே கருத்து மோதல் எழுந்ததுண்டு. காவிரி பிரச்னை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பேசிய சத்யராஜ் கொஞ்சம் காட்டமாகவே பேசியிருந்தார். அந்தப் பேச்சில் ரஜினியைத்தான் அவர் மறைமுகமாக அட்டாக் செய்தார் என்ற கருத்தும் இன்றளவும் உண்டு. ஆனால் அதுகுறித்து இருவருமே மௌனம்தான் சாதித்துவந்தார்கள்.
ரஜினியின் பேச்சு: இந்நிலையில் கூலி இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் குறித்து ரஜினி பேசியது பாராட்டும்படி இருக்கிறது. அவர் பேசுகையில், "உழைப்புக்கு மேலே எனது வெற்றிக்கு ரகசியம் உண்டு. அது இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார் என லோகேஷ் சொல்லியபோது, அவர் நடிப்பாரா என கேட்டேன். அதற்கு அவரோ, உங்களிடம் சத்யராஜ் கேட்க சொன்னதாக கூறினார்.
சிவாஜியில் மறுத்துவிட்டார்: சிவாஜி படத்தில் நான் என்ன சம்பளம் வாங்குகிறேனோ அதே சம்பளத்தை கொடுக்கிறோம் என சொல்லியும் அதில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் தனது மனதில் பட்டதை சொல்லிவிட்டு போய்விடுவார். மனதி பட்டதை யார் பேசுகிறார்களோ அவர்களை நம்பலாம். ஆனால் உள்ளேயே வைத்திருக்கிறார்கள் பாருங்கள் அவர்களைத்தான் நம்ப முடியாது" என்றார். அவரது இந்தப் பேச்சை ரசிகர்கள் அதிகம் ரசித்து ஷேர் செய்துவருகிறார்கள். இப்படத்தில் அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் என குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











