ஆங்கிலம் மட்டும்தான் வளர்ச்சிக்கு உதவும்.. அப்போ ஹிந்தி?.. ரஜினிகாந்த் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரே பாஸ்
சென்னை: ரஜினிகாந்த் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கின்றன. நடிப்பில் எப்படி தனக்கென தனி பாணியை கொண்டு வென்று காண்பித்தாரோ அதேபோல் தனது மனதில் இருப்பதை யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் பட்பட்டென பேசக்கூடியவர் அவர். அந்தவகையில் மொழி குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவாஜிராவ் என்கிற இயற்பெயரை கொண்ட ரஜினிகாந்த்தை கே.பாலசந்தர் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், பிறகு வில்லன், அதனைத் தொடர்ந்து ஹீரோ என்று படிப்படியாக வளர்ந்தவர் ரஜினி. தனது நடிப்பில் தனக்கென தனி ஸ்டைலை கொண்டிருந்ததால் சூப்பர் ஸ்டார் என்கிற நாற்காலியை மக்கள் அவருக்கு கொடுத்தார்கள். தனக்கு வழங்கப்பட்டது எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும்; அந்த கேரக்டரின் குணாதிசயத்தை குலைக்காமல் அதில் ஸ்டைலை புகுத்தி வெற்றி கண்டவர்.

ஏராளமான படங்கள்: ரஜினிகாந்த் இதுவரை 168 படங்கள்வரை நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதேபோல் உலகளவில் ஃபேமஸான முதல் இந்திய ஹீரோவும் அநேகமாக ரஜினியாகத்தான் இருப்பார். அவர் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் சக்கைப்போடு போட்டது. இன்றளவும் சாமானியர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்கள்கூட ரஜினிகாந்த்தைத்தான் தங்களது ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காதது.
அடுத்த படம்: கடைசியாக அவர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இதன் முதல் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டிருந்தது. எனவே இந்தப் படமும் அது போல் பிரமாண்ட வெற்றியை பெறும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதீதமாகவே இருக்கிறது. மேலும் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் அவர் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியின் கெத்து: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தனது மனதில் உள்ளதை சட்டென பேசக்கூடியவர். பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில்கூட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தை கடுமையாக விமர்சித்தார். அதேபோல் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் பேசியதற்கு அருகில் அமர்ந்திருந்த முதலமைச்சர் கருணாநிதியைகூட கண்டுகொள்ளாமல் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டி தனது வரவேற்பையும், ஆதரவையும் கொடுத்தார். இந்தச் சூழலில் அவர் பேசியிருக்கும் இன்னொரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன பேசினார்?: ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், "எந்த மொழியை நீங்கள் தவறாக பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கிண்டல் செய்யமாட்டார்கள். ஆனால் ஆங்கிலத்தை தவறாக பேசினார்கள் கிண்டல் செய்வார்கள். அதற்கு பயந்தே பலரும் ஆங்கிலம் பேசவில்லை. ஆங்கிலம் பேச பேசத்தான் வரும். எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் நண்பர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுங்கள். ஆங்கிலம்தான் உங்களின் எதிர்காலம்.
தற்போது உலகம் கணினி மயமாகிவிட்டது. ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தான் உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் அடைய முடியும். தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். ஆங்கிலம் கற்றுக்கொண்டு பல மாநிலங்களுக்கு சென்று இளைஞர்கள் பெயரும், புகழும் வாங்கினால் அது தமிழுக்கு பெருமை. சுந்தர் பிச்சை, அப்துல் கலாம் ஆகியோரால் தமிழுக்கும், தமிழனுக்கும் தான் பெருமை" என்றார். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் ரஜினியின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்களோ, ஹிந்தியை விட ஆங்கிலம்தான் வளர்ச்சிக்கு உதவும் என்று மறைமுகமாக ரஜினி சொல்லிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











